ஜல்லிக்கட்டு – ஒரு விதண்டாவாதம்

நடந்து முடிந்த ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றி எனது சில எண்ணங்களை கூற விரும்புகிறேன்.வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது.சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது .தீர்ப்பு யார் பக்கம் வரும் என்பது தெரியவில்லை.PETAவின் பின்னணி, மத்திய மாநில அரசுகளின் அலட்சியம்  இவைகளை பார்க்கும் போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வராது போலத்தான் தெரிகிறது.எது எப்படியாயினும் ஒரு போராட்டமாக இது கண்டிப்பாக மிகப்பெரும் வெற்றி என்றே கருதுகிறேன்.ஜல்லிக்கட்டு வேண்டுமா, வேண்டாமா என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் இங்கு போராட்டத்தைப்பற்றி போராடுபவர்களைப்பற்றி கூறப்படும் சில குற்றச்சாட்டுகளுக்கு மட்டும் பதில் சொல்லலாம் என நினைக்கிறேன்.இது என் கருத்து மட்டுமே.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களில்  எத்தனை பேருக்கு தமிழ் ஒழுங்காக பேச தெரியும்? ஜல்லிக்கட்டு பற்றி இவர்களுக்கு என்ன தெரியும்.வாழ்வில் ஒரு முறையாவது ஜல்லிக்கட்டை பார்த்திருப்பார்களா? கலாச்சாரம் என்ற பெயரில் இதை நியாயப்படுத்தலாமா, அப்படியென்றால் சதியையும் ஆதரிப்பீர்களா? இது போராட்டம் போலவே இல்லை ஏதோ திருவிழா போல இருந்தது என்பவைகள்.இவர்கள் மொத்தம் மூன்று வகையினர். முதல் வகையினர் அறிவுஜீவிகள். தன்னை கலகக்காரன் என முன்னிறுத்துவது இவர்களின் குறிக்கோள்.இவர்கள் எதுவாக இருந்தாலும் பெரும்பான்மைக்கு எதிராகவே இருப்பார்கள்.மாற்றுக்கருத்துக்கு உரிமை உண்டு என்பதற்காகவே மாற்றுக்கருத்து சொல்பவர்கள்.இரண்டாவது வகையினர் தங்களை இயேசு கிறிஸ்துவாகவே நினைத்து கொள்பவர்கள்.உலகிலுள்ள பாவிகளை ரட்சிக்க வந்தவர்கள். இவர்களுக்கு  இவர்களைத் தவிர மற்ற அனைவரும் பாவிகள்.விலங்குகளை துன்புறுத்தக்கூடியவர்கள்.நாகரீகப்படுத்த வேண்டியவர்கள்.அநேகமாக அனைவரும் உயர்ந்த அதிகார வர்க்கத்தை சேர்ந்தவர்கள். மற்றவர்களை நோக்கி குனிந்தே பேசுவார்கள்.மூன்றாமவர்கள் உண்மையிலேயே குழப்பமடைந்தவர்கள்.உண்மையை தேடுபவர்கள்.கூறும் காரணங்களால் திருப்தி அடையாதவர்கள்.முதல் இருவகையினரைப் பற்றி கவலை இல்லை.நான் கூறப்போவது மூன்றாமவர்களுக்காகவே.

தமிழ்நாட்டில் காளைகளை இரு விதங்களில் பயன்படுத்தினார்கள் .ஒன்று உழவுக்கு மற்றொன்று இனப்பெருக்கத்துக்கு.இனப்பெருக்கத்துக்காக வளர்க்கும் காளைகளை உழவுக்கு பயன்படுத்த மாட்டார்கள் .இதை கோவில் மாடாகவே  வளர்ப்பார்கள்.உழவுக்கு பயன்படுத்தப்பட்ட காளை பின்  ட்ராக்டரால் மாற்றீடு செய்யப்பட்டது. இதனால் அந்த காளைகளின்  தேவை முற்றிலும் மறைந்தது.இவைகள் அடிமாடுகளாக விற்கப்பட்டன.இப்போது மீதமிருப்பது ஜல்லிக்கட்டு காளை மட்டுமே.இந்த காளையை வளர்க்கும் குடும்பங்கள் அதை கௌரவத்திற்காக மட்டுமே  வளர்க்கிறார்கள்.ஏனெனில் இவைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்பது ,வெற்றிபெறுவது அவர்களுக்கு பெருமை என்று கருதுகிறார்கள்.இப்போது PETA ஜல்லிக்கட்டுக்கு தடை கேட்டு நீதிமன்றம் சென்றுள்ளது.அது நிறைவேறும் பட்சத்தில் காளையை வளப்பதற்கான எந்த தேவையும் எல்லை. ஏனெனில்  உலகில் கலாச்சார, பொருளாதார மதிப்பில்லாத எதுவுமே மிச்சமிருப்பதில்லை.எந்த இனமும் நீடித்து வாழ அதற்க்கான தேவை வேண்டியுள்ளது. எனவே இவைகளும் அடிமாட்டிற்கு விற்கப்படும்.இப்போது இனப்பெருக்கத்திற்கு நாம் வெளிநாட்டு மருந்துகளை சார்ந்து இருக்க வேண்டியது நேரும்.ஏனெனில் இந்த மருந்துகளின் முற்றுரிமை அவர்களிடமே உள்ளது.இதற்கு நாம் பெரிய விலை கொடுக்க  வேண்டும்.இதுதான் விளைவு.PETAவின் இந்த தடை உண்மையிலேயே விலங்குகள் நலன் கருதியா?  இல்லை, உள்நோக்கம் உடையதா?  தெரியவில்லை. இந்த அமைப்பு தனக்காக வாதாடும் வழக்கறிஞருக்கு ஒரு அமர்வுக்கு 2.5கோடி கட்டணம் தருகிறதாம். எவ்வளவோ மிகப்பெரும் பிரச்சனைகள் இருக்கும்போது இவ்வளவு பணம் கொடுத்து, இவ்வளவு எதிப்பையும் மீறி செய்கிறார்கள் என்றால் அவர்கள் நோக்கம் சந்தேகப்படக்கூடியதே.

உலகில் உயிர்கள் எல்லாமே ஒன்றை ஒன்று சார்ந்தே வாழ்கின்றன.சார்ந்து வாழ்கின்றன என்பதை   விட சுரண்டி வாழ்கின்றன என்பதே சரியாக இருக்கும். இது மனிதனுக்கும் பொருந்தும்.அரசியல், தொழில், குடும்பம் எல்லாவற்றிலுமே சுரண்டல்தான் அடிப்படை.தலைவன் தொண்டனை, தொண்டன் தலைவனை, முதலாளி தொழிலாளியை, தொழிலாளி முதலாளியை, கணவன் மனைவியை, மனைவி கணவனை,பிள்ளை பெற்றோரை, பெற்றோர் பிள்ளைகளை இவ்வாறு.என்ன வெவ்வேறு பெயர்களை கொண்டு அழைக்கிறோம்.கடமை, பொறுப்பு, பாசம்,அக்கறை என்று . காளைகளை நாம் ஜல்லிக்கட்டுக்கு பயன்படுத்துவதும் ஒரு சுரண்டல் தான்.ஆனால் அதன் மூலமே அந்த இனம் காப்பாற்றப்படுகிறது.

இவர்களுக்கு ஒழுங்காக தமிழ் பேசத்தெரியுமா? ஒழுங்காக பேசத்தெரிந்தால் தான் தமிழனா?அப்படியென்றால் யாரை  தமிழன் என்பீர்கள்.இங்கு யார் கலப்பு இல்லாமல் தமிழ் பேசுகிறார்கள்.தமிழுக்கு வரையறை இருக்கிறதா?சங்க காலத்தில் இருந்த தமிழ் வேறு.இரு நூறு வருடங்களுக்கு முன் இருந்த தமிழ் வேறு.இன்று இருக்கும் தமிழ் வேறு.ஏன்.இரு மாவட்டங்களுக்கு இடையே பேசும் தமிழே வேறுபடுகிறது.கலப்பு இல்லாத எந்த மொழியும் இல்லை.இங்கு தமிழ் பேசுபவர்கள் என்பதை விட தமிழ் பேசியவர்களின் மரபு என்று கொள்வது சரியாகும்.இனம் என்பது மொழியையும் தாண்டிய ஒன்றுதான்.இங்கு மொழி அந்த இனத்தின் அடையாளம்.அதனால் தான் தமிழ் பேச தெரியாவிட்டாலும் இன்று ஆஸ்திரேலியா, கனடா, மலேஷியா போன்ற நாடுகளில் ‘Save Jallikattu’ என்ற போர்டை ஏந்திக்கொண்டு நிற்கிறார்கள்.நான் கூறுவது இதை ஏன் ஒரு நல்ல ஆரம்பமாக எடுத்து கொள்ள கூடாது.

இவர்களுக்கு ஜல்லிக்கட்டை பற்றி என்ன தெரியும் .எப்பொழுதாவது நேரில் ஜல்லிக்கட்டைப் பார்த்திருப்பார்களா ? இல்லைதான்.PETAக்கு தான் ஜல்லிக்கட்டை பற்றி என்ன தெரியும்.இல்லை கணினியில் விளையாட வேண்டியது தானே,சிங்கத்தை அடக்க வேண்டியது தானே என்ற நீதிபதிக்குத்தான் என்ன தெரியும்.நான் கருதுவது இங்கு ஜல்லிக்கட்டு ஒரு குறியீடுதான்.இந்த போராட்டம் மாநில, மத்திய அரசு, நீதித்துறை மேல் எழுந்துள்ள ஓர் அதிருப்தி தான்.

ஜல்லிக்கட்டு தடை தீர்ப்பில் மீண்டும் மீண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது காளைகள் துன்புறுத்தப்படுகின்றன.வாலைக் கடிக்கிறார்கள்.சாராயம் ஊற்றப்படுகிறது.மாடு நிற்க இடமில்லை.மிளகாய் போடி தூவப்படுகிறது போன்றவை.நான் நேரில் ஜல்லிக்கட்டைப் பார்த்ததில்லை.நான் கேள்விப்பட்டவரை இது ஓரளவு உண்மைதான்.ஆனால் இது போன்ற அத்துமீறல்கள் எந்த விளையாட்டில் தான் இல்லை.இதை வரைமுறை படுத்த வேண்டுமின்றி முற்றிலும் தடை செய்யக்கூடாது.

கலாச்சாரம் என்ற பெயரில் இதை நியாயப்படுத்தலாமா, அப்படியென்றால் சதியையும் ஆதரிப்பீர்களா?நேர்மையாக சொல்லவேண்டும் என்றால் சதியையும் ஜல்லிக்கட்டையும் ஒப்பிடுவது தவறு. இது வாதத்திற்கு வேண்டுமெனில் நன்றாக இருக்கலாம்.ஆனால் சிறுபிள்ளைத்தனமானது.சரி கலாச்சாரமே வேண்டாம் என்கிறீர்களா?முதலில் எதை கலாச்சாரம் என்பீர்கள்.நீங்கள் உங்கள் கலாச்சாரத்தை உதறும்  போது உங்கள் அடையாளத்தை உதறுகிறீர்கள்.உங்களால் அடையாளம் இல்லாமல் வாழ முடியுமா?வேண்டுமெனில் வேறொரு அடையாளத்தை தேடிக்கொள்ளலாம் .அப்போது அதற்கான கலாச்சாரத்தை நீங்கள் பின்பற்றித்தான் ஆகவேண்டும்.

இது போராட்டம் போலவே இல்லை ஏதோ திருவிழா போல இருந்தது என்பது.இவர்கள் போராட்டம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று  எதிர்பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. எங்கோ படித்தது, ஆயுத போராட்டத்தை விட அமைதிப்போராட்டத்திற்கே அதிக பயிற்சி தேவை என்று.இந்த போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்கள் மாணவர்களும் இளைஞர்களும். அவர்கள் அவர்களுக்கே உரிய ஆற்றலும் மீறலும் கொண்டவர்கள்.எந்த எதிர் கால கணக்கும் அற்றவர்கள்.அவர்கள் விரும்பியிருந்தால்  நீங்கள் நினைக்கிறபடியோ அல்லது வேறு விதமாகவோ போராட்டத்தை கொண்டு சென்றிருக்கலாம்.ஆனால் By-choice அவர்கள் அமைதிப்போராட்டத்தை தேர்ந்தெடுத்தார்கள்.அவர்களின் வெற்றியே  குடும்பங்களையும்  போராட்டத்தில் பங்கெடுக்க வைத்ததுதான்.

கடைசியாக PETAவுக்கு, நீங்கள் வெஜிடேரியனாக இருப்பது நல்லது.வேகானாக(Vegan) இருப்பதும் நல்லதே.ஆனால் அப்படி இல்லாதவரை காட்டுமிராண்டியாக நினைப்பதே பிரச்சனையின் ஆரம்பம்.விலங்குகள் துன்பப்படுகின்றன என்று கூறுகிறீர்கள்.எவ்வாறு?ஏனெனில் அதுவும் பாலூட்டி.ஆக அதற்கும் நமக்கும் ஓரளவு ஒத்த உணர்ச்சியே.கண்களில் கண்ணீர் வரும்.கதறி ஓலமிடும்.ஆனால் தாவரம் பாலூட்டி இல்லை.அது வலியை எவ்வாறு வெளிப்படுத்தும் என்பது நமக்குத் தெரியாது.நம் புலன்களால் அறிய முடியாது.எனவே கவலை இல்லை.வெட்டி திங்கலாம்.இந்திய தாவரவியலாளர் ஜெகதீஷ் சந்திரபோஸ் தாவரங்களுக்கும் உணர்ச்சி உண்டு என்று கண்டுபிடித்து அறிவித்தார்.தேவை இல்லை. இதில் கண்ணையும் காதையும் மூடிக்கொண்டு வாயை மட்டும் திறந்து கொள்ளலாம். மற்றபடி தலப்பாக்கட்டிலும், KFCயிலும் சாப்பிட்டுக்கொண்டு ஜீவகாருண்யம் பேசுபவர்களிடம் சொல்ல ஒன்றுமில்லை.

இந்த  இளைஞர்களை பற்றி கவலைப்படும், குறைகூறும் மூத்த தலைமுறைக்கு  ஒன்றே ஒன்றுதான் சொல்லத்தோணுகிறது.”நீங்கள் வழிகாட்டியாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, வழிவிட்டு நில்லுங்கள் போதும் “

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s