சீனப்பயணம் – 4

மறுநாள் Forbidden city, Tianmen square இரண்டுக்கும்  செல்வதாக திட்டம்.இரண்டும்  எனது ஹாஸ்டெலில் இருந்து கிட்டத்தட்ட 3கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.நடந்தே செல்லலாம் என்று முடிவெடுத்து இருந்தேன்.காலையில் 9 மணி அளவில் கிளம்பி Forbidden city நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.பெய்ஜிங் பற்றிய மேப் ஒன்றை எனது மொபைலில் தரவிறக்கம் செய்து வைத்திருந்தேன்.offlineயிலும் அது  நன்றாகவே வழி காட்டியது.கடுங்குளிரில் நடப்பது நன்றாக இருந்தது.மிக அகண்ட சாலைகள்.ஆடி பென்ஸ்  போன்ற உயர்ரக கார்களை அதிகம் காண முடிந்தது.பைக்கில் செல்பவர்கள் குளிருக்கு மெத்தை போன்ற ஒன்றை முன்னால் வைத்து மறைத்து சென்றார்கள்.அனைத்தும் எலக்ட்ரானிக் பைக் தான்.11 மணி வாக்கில் Forbidden cityயை அடைந்தேன். Forbidden city, yongle பேரரசரால் கட்டப்பட்டது.1406இலிருந்து 1420வரை 14 ஆண்டுகள் கட்டியிருக்கிறார்கள்.இந்த வளாகத்தில்  மொத்தம் 986 கட்டிடங்கள் உள்ளது.1924வரை ராஜகுடும்பத்தின் வசிப்பிடமாக இருந்த இது பின் அதன் கடைசி மன்னர் Puyi வின் வெளியேற்றத்திற்கு பிறகு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது.PuYI வின் வாழ்க்கையை The last emperor என்று ஹாலிவுட்டில் திரைப்படமாக எடுத்துள்ளார்கள்.அற்புதமான படம். Forbidden cityயை  அற்புதமாக காட்சிப்படுத்தி இருப்பார்கள். அரண்மனைகள் ப்ரம்மாண்டதையும் ஆச்சர்யத்தையும் தாண்டி ஏனோ மனகனத்தையே கொடுக்கின்றன. அதிகாரத்தையும் வீழ்ச்சியையும் ஒருங்கே கண்முன்னே காட்டி விடுகின்றன.அரண்மனையில் தனித்த நிற்கும் போது ஒரு வித நிரந்தரமின்மை,செயலின்மையை உணர முடிகிறது. ரகசியங்களும் துரோகங்களும் வலிகளும் எத்தனை பார்த்திருக்கும்.அதில் நடக்கும் போது கடந்த காலத்தில் நடப்பது போலவே கற்பனை செய்து கொள்கிறேன். ஆனால் இந்திய அரண்மனைகளில் ஏற்படும் ஒரு கனவு நிலை இங்கு வரவில்லை. இந்த கலாச்சார வாழ்க்கையை கற்பனை செய்யமுடியாதது காரணமாக இருக்கலாம். நான் எந்த ஒரு அரண்மனையிலும் முதலில் தேடுவது அந்தப்புரத்தை தான். அற்பப்பதரே.

DSCN1531

மிகப் பெரிய அரண்மனை.முழுவதும் சுற்றிப்பார்க்க ஒரு முழு நாள் வேண்டும்.குழப்பமான வழிகள். ஏராளமான கூட்டம்.சீசன் நேரம் இல்லை என்பதால் இந்த கூட்டம் கம்மி.இல்லையேல் இன்னும் அதிகமாக இருக்கும் என்றார்கள்.நான்கு மணிநேரம் உள்ளே சுற்றிப்பார்த்து விட்டு 3மணி அளவில் வெளியே வந்தேன்.டியன்மேன்  சதுக்கம் செல்ல வேண்டும்.Tianmen square எனும் டியன்மேன் சதுக்கம் செல்ல இரண்டரை கிலோமீட்டர் அரண்மனையை சுற்றிச் செல்ல வேண்டும். முதலில் Tianmen square பின் Forbidden சிட்டி சென்றிருக்க வேண்டும்.இரண்டின் வாயிலும் எதிர் எதிரே தான் இருந்தது.மேப்பை சரியாக கவனிக்காததால் முதலில் Forbidden cityக்குள் நுழைந்துவிட்டேன்.நுழைவிலிருந்தது  வெளியே வர நேர்கோடாக இரண்டரை கிலோமீட்டர் இருக்கும்.பின் Tianmen squareக்கு செல்ல சுற்றி மீண்டும் இரண்டரை கிலோமீட்டர் நடக்க வேண்டியதிருந்தது .நடக்க ஆரம்பித்தேன்.பாதி தூரம் சென்றிருந்த பொது,”Excuse me, are you going to Tianmen?” என்று அங்கு நின்றிருந்த இரு பெண்கள் பேச ஆரம்பித்தார்கள்.அவர்களும் டியன்மேன் சதுக்கத்திற்கு சென்று கொண்டிருப்பதாக சொன்னார்கள். பெய்ஜிங்கிற்கு வெளியே காலேஜில் படிப்பதாகவும் சுற்றுலாவுக்காக வந்ததாகவும் சொன்னார்கள்.ஆங்கிலம் பழகி கொண்டிருப்பதாகவும்,சிறிது நேரம் பேசி கொண்டிருந்து விட்டு அப்புறம் சேர்ந்து டியன்மேன் செல்லலாம் என காபி சாப்பிட அழைத்தார்கள்.மூன்று ரோடுகள் சந்திக்கும் பஜார் போன்ற ஏரியா.பல்லிளித்து கொண்டே நம்பிப்போனேன். ரெஸ்ட்டாரெண்ட் என்று அவர்கள் சொன்னதை பார்த்ததுமே சந்தேகம் வந்தது. இருந்தாலும் திரும்பி போக மனம் இல்லை.ஒரு சிறிய அறையும் அதை விட சிறிய அறையும் தான் இந்த ரெஸ்ட்டாரெண்ட்.அந்த மிக சிறிய அறையில் சென்று உட்கார்ந்தோம். மற்ற சிறிய அறையில் ஒருவன் உட்கார்ந்திருந்தான். குளிர்கிறது என்று நாங்கள் உட்கார்ந்திருந்த அறையின் கதவையும் சாத்திவிட்டார்கள்.வயிற்றில் பட்டாம் பூச்சி பறக்க ஆரம்பித்து விட்டது.வெளியில் உட்கார்ந்திருந்தவன் உள்ளே வந்து மெனுவை நீட்டினான். ஒல்லியாக இருந்தவள், அவர்களுக்கு காபி ஆர்டர் செய்தாள்.மெனுவை என்னிடம் கொடுக்காமலேயே என்னிடம் கிரீன் டீ ,பீர்,ஹாட் ட்ரிங்க்ஸ் என்ன வேண்டும் என்று கேட்டாள். கிரீன் டீ ஆர்டர் செய்தேன்.அவர்களும் அதை தான் எதிர்பார்த்தார்கள் போல.சிறிது நேரத்தில் ஒரு கண்ணாடி கோப்பை நிறைய கிரீன் கொண்டு வந்தான்.புரிந்து விட்டது.மெனுவை வாங்கிப்பார்த்தேன்.க்ரீன் டீ ஒரு கப் 60CNY, ஒரு கோப்பை 380CNY.கோப்பை வேண்டாம்.கப் போதும் என்றேன்.அதை அவள் சைனீஸில் மொழி பெயர்த்து சொல்லி அவன் ஏதோ சொல்ல,என்னிடம் ப்ரிபேர் செய்து விட்டானாம் இனி திரும்ப பெற மாட்டானாம் என்றாள்.ரைட்டு.சாத்திய அறை,கையில் பாஸ்போர்ட்,பர்ஸ், கேமரா.வகையாக மாட்டிக்கொண்டேன்.இரண்டு வழிதான்.கட்டி உருள்வது.காலில் விழுவது.இரண்டாவதில் தான் நான் கில்லாடி.வந்த பெண்களிடம் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றும் நாம் ஷேர் செய்து கொள்வோம் என்று கூறி பர்ஸையும் எடுத்து காண்பித்தேன்.அதில் மொத்தம் இருந்ததே 400CNY தான்.மீதமிருந்ததை ரூமிலேயே வைத்து விட்டு வந்துவிட்டிருந்தேன்.நாளை உணவுக்கும் ஏர்போர்ட் செல்லவும் வேண்டும் என்றேன்.கிரெடிட் கார்டை யூஸ் பண்ண சொன்னாள்.அது இன்டர்நேஷனல் கார்டு இல்லை,இங்கு உபயோகப்படுத்த முடியாது என்றேன்.இது போல 15 நிமிஷம் கெஞ்சி கூத்தாடி பிறகு 200CNY கொடுத்தால் போதும் மீதியை நாங்கள் pay செய்து கொள்கிறோம் என்றார்கள்.கொடுத்துவிட்டு விட்டால் போதும் என்று வந்துவிட்டேன்.ஒரு கிரீன் டீக்கு 2000ரூபாய் கொடுத்திருக்கிறேன். வெளியே வந்த போது அங்கு நின்றிருந்த சிலர் ‘இன்னைக்கு இவன் சிக்கிட்டான் போல’ என்பது போல் பார்த்தார்கள்.அவர்களை கடந்து முன்பு அந்த பெண்களை சந்தித்த இடத்திற்கு சென்ற பொது,வேறொரு பெண் ” Excuse me, are you going to Tainmen?”  என்று அழைத்தாள்.ஒரு வார்த்தை பேசாமல் டியன்மேன் நோக்கி நடக்க தொடங்கி விட்டேன்.

IMG_20161230_144305_HDR

106 ஏக்கருக்கு விரிந்துள்ள டியன்மேன் சதுக்கம் உலகில் ஆறாவது பெரிய சதுக்கம்.இங்கு சீன கம்யூனிச தலைவர் மாவோவின் சமாதியும்,தேசிய அருங்காட்சியகமும் உள்ளது.1989இல் அரசாங்கத்திற்கு எதிராக எழுந்த மாணவர் எழுச்சி இங்கு தான் இரும்பு கரம் கொண்டு அடக்கப்பட்டது.அப்பொழுது போலீஸாரால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில்   பலியானவர்களின் எண்ணிக்கை 300இலிருந்து 7000வரை இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.Tianmen Gate டவருக்கு வெளியே மாவோவின் புகைப்படத்தை மாட்டியுள்ளார்கள்.பலத்த சோதனைக்குப் பிறகே கேட் டவருக்குள் அனுப்புகிறார்கள்.இரண்டு மணி நேரம் அங்கு  சுற்றிக்கொண்டிருந்தேன்.பெரிய வருத்தம் இல்லை என்றாலும் அந்த பெண்களிடம் ஏமாந்ததை பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன்.பின் மூன்று கிலோமீட்டர் நடந்து ரூம்க்கு வந்துவிட்டேன். வந்தவுடன் முதல் வேலையாக wikitravel தளத்தில் பெய்ஜிங்கை செக் செய்தேன்.இதனை எந்த இடத்தில், எப்படி ஏமாற்றுவார்கள் என்பது உட்பட தெளிவாக எழுதி இருந்தார்கள்.முன்பு  படித்திருக்கவில்லை.இனி என்ன செய்ய முடியும். இன்றும் இரவு உணவு முந்தைய நாள் சாப்பிட அதே சீன உணவகத்திற்கு சென்று இரண்டு பீரும், இனிப்பான பீப் 65 போல இருந்த ஒன்றும் ஆர்டர் செய்தேன்.பீப்பை  சாப்பிட chop stick வைத்திருந்தார்கள்.முயன்று பார்த்து விட்டு முடியாமல் கையாலே எடுத்து சாப்பிட்டேன்.பின் ரூம்க்கு சென்று தூங்கிவிட்டேன்.எனக்கு மறுநாள் இரவு, இல்லை, அதற்கு மறுநாள் அதிகாலை 12.20மணிக்கு கொழும்பு வழியாக சென்னை செல்ல விமானம்.

DSCN1598

மறுநாள் காலை ரெடியாகி,காலை 10மணிக்கு ரூமை காலி செய்து கொடுத்தேன்.பின் எனது பெரிய backpackஐ ஹாஸ்டெலில் லாக்கர் ரூமில், மாலை வாங்கி கொள்வதாக சொல்லி கொடுத்துவிட்டு எனது சிறிய backpack மட்டும் எடுத்து கொண்டு Shichahai கிளம்பினேன். எனது சிறிய backpack இல் பொதுவாக பாஸ்போர்ட்,தண்ணீர் பாட்டில்,கேமரா,பேட்டரி பேக்கப்,சிறிய நோட்புக் போன்றவை இருக்கும். Qianhai, Xihai மற்றும்  Houhai எனும் மூன்று ஏரியையும் அதனை சுற்றியுள்ள பகுதியையும் சேர்த்து Shichahai என்கிறார்கள்.பார் ஸ்ட்ரீட் அந்த பகுதியில் தான் இருந்தது.இப்பகுதியில் Hudong எனப்படும் சீன பாணி வீடுகளைக் கொண்ட தெருக்கள் பல உள்ளன.பெய்ஜிங்கில் பொதுவாக இது போன்ற Hudong தெருக்களை இடித்து விட்டு அடுக்குமாடி கட்டிடங்களை கட்டி விடுகிறார்கள். அரசாங்கம் சிலவற்றை இன்னும் விட்டு வைத்திருக்கின்றது. Shichahai பகுதி ஹாஸ்டெலில் இருந்த 2கிலோமீட்டர். Shichahai ஐ அடைந்து ஏரியை சுற்றி வர ஆரம்பித்தேன்.ஏரியை சுற்றி சிறிய பார்க்களும்,பயணிகள் வசதிக்கு ஒவ்வொரு 200மீட்டர்க்கும் டாய்லெட்டும்,ஏரியா மேப்பும் வைத்துஇருந்தார்கள்.பல Hudongகளும்,பழைய சீன பாணி வீடுகளையும் காண முடிந்தது.பனியினால் ஏரி உறைந்திருந்தது.ஒரு பகுதியில் சிலர் ஐஸ் ஸ்கேட்டிங் செய்து கொண்டிருந்தார்கள். ஏரியை சுற்றி எப்படியும் 3கிலோமீட்டராவது நடந்து, ஆரம்பித்த இடத்திற்கு வந்து விட்டேன்.பொதுவாக புதிய இடங்களில் நடப்பது எனக்கு பிடிக்கும்.எனக்கு நடப்பதில் இருக்கும் பிரச்சனை வெயிலும் தூசியும்.இங்கு இரண்டு பிரச்சனையும் இல்லை.5டிகிரி குளிர்.ஆனால் ஆறு நாட்கள் தொடர்ந்து நடந்தது லேசான கீழ் முதுகு வலியை உருவாக்கி இருந்தது. சிகரெட்டும் சேர்ந்து காரணமாக இருக்கலாம். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கூட்டம் சுத்தமாக இல்லை.ஆங்காங்கே சுற்றுலா வந்த சில சீனப்பெண்கள் கூட்டங்களை காண முடிந்தது.திரும்பி வரும் வழியில் ஒரு சிறுமி குளிருக்கான ஜாக்கெட்டும்,கேப்பும் அணிந்து ரோட்டோரத்தில் சைனீஸ் மொழியில் ஏதோ எழுதிருந்த தாளை தரையில் பரப்பி வைத்து உட்கார்ந்திருந்தாள். வாய்க்குள் ஏதோ பாடலை முணுமுணுத்தக் கொண்டிருந்தாள்.காசு கேட்கிறாளா தெரியவில்லை.அனைவரும் அவளை கடந்து தான் சென்று கொண்டிருந்தார்கள்.அவளுக்கோ அவள் பாடலை தவிர வேறெதிலும் அக்கறை இல்லை.சில நேரங்களில் சில காட்சிகள் ஏதோ செய்து விடுகிறது.அந்த சிறுமியையே சில நேரம் பார்த்துக்கொண்டு இருந்தேன்.மதியம் 3மணி வாக்கில் ஹாஸ்டல் வந்து குளித்து விட்டு கிட்டத்தட்ட மாலை 6மணி வாக்கில் ஏர்போர்ட் கிளம்பினேன்.வேலை முடிந்து அப்போது தான் ஹாஸ்டலுக்குள் நுழைந்த,என்னுடன் தங்கி இருந்த சீனப்பெண்ணைப் பார்த்தேன்.அங்கு தான் தங்கியிருக்கிறாள்.வேறு ரூம் மாறி விட்டாளாம்.அவளது bedஐ அவள் முன்பதிவு செய்யவில்லை.இப்போது வேறு யாரோ இணையதளத்தில் முன்பதிவு செய்துவிட்டார்களாம்.எனவே வேறு ரூம்க்கு மாற்றி விட்டார்கள். அவளிடம் bye சொல்லிவிட்டு கிளம்பினேன்.subway மூலமாகவே ஏர்போர்ட் சென்று விடலாம்.25CNY தான்.புத்தாண்டு பிறந்த இரவு 12 மணிக்கு பெய்ஜிங் ஏர்போர்ட்டில் தான் இருந்தேன்.பெய்ஜிங் நேரப்படி இரவு 12.30க்கு விமானம் கிளம்பியது.விமானத்தில் கூட்டம் இல்லை.கொடுத்த பீரும்,சிக்கன் ரைஸும் சாப்பிட்டு விட்டு ,தொடர்ச்சியாக நான்கு இருக்கைகள் காலியாக இருந்த இடத்தில் சென்று கால் நீட்டி படுத்துவிட்டேன்.நல்ல தூக்கம். இலங்கை நேரப்படி காலை 6 மணிக்கு விமானம் கொழும்புவை அடைந்தது.பின் அங்கிருந்து 7.30 மணிக்கு சென்னைக்கு விமானம்.8.30க்கு சென்னை அடைந்தது.செக்கின் லக்கஜ்க்கு 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து விட்டு போய்க்கேட்டால் பேக் மிஸ்ஸிங் என்றார்கள்.அந்த பையில் துணிகளும்,புத்தகங்களும்,வாங்கி வைத்திருந்த கிப்ட் ஐயிட்டங்களும் இருந்தது.மிஸ்ஸிங் கம்பளைண்ட் எழுதிக் கொடுத்தேன்.ஒரு வாரத்தில் தேடி கண்டுபிடித்து கொடுத்துவிடுவோம் என்றார்கள்.20நாட்கள் கழித்து தான் கிடைத்தது.அங்கிருந்து கோயம்பேடு சென்று பெங்களூரு வண்டி பிடித்து இரவு 9 மணி அளவில் பெங்களூர் வந்தடைந்தேன்.நாளை ஆபீஸ்க்கு செல்ல வேண்டும்.

மீண்டும் பயணிப்போம்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s