ஆரியர்-திராவிடர்

சிந்து சமவெளி நாகரீகம், ஆரியர்கள் வருகை, திராவிட இனம் போன்றவை பற்றி அரசியல் கட்சிகளும், ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொருவரும்  அவர்கள் கட்சியின் கொள்கைக்கு சாதகமாகவோ அல்லது அவரவர் நம்பிக்கைக்கு சாதகமாகவோ வேறு வேறு விளக்கங்கள் சொல்கிறார்கள். யாரை நம்ப, யாரை விட என்று தெரியவில்லை.சென்ற மதுரை புத்தக கண்காட்சியில் ‘இந்திய வரலாறு’ என்ற புத்தகத்தை வாங்கினேன்.எழுதியவர் இ.எம்.எஸ் நம்பூதிரிபாட்.கேரளாவை சேர்ந்த கம்யூனிச தலைவர்.அங்கு இரண்டு முறை முதல்வராக இருந்தவர்.பொதுவாக கம்யூனிஸத்தையும் மதம் என்றே கூறலாம்.ஒரு கம்யூனிஸ்ட், எல்லா வித பிரச்சினைகளுக்கும் தீர்வு கம்யூனிச அரசே என்று தான் நினைப்பார்.இந்த புத்தகத்தில் இந்திய வரலாறு பற்றி சிந்து சமவெளி நாகரீகத்தில் ஆரம்பித்து ஆரியர்கள் வருகை, பரவல், வர்ண ஜாதி வேறுபாடு என்று எல்லாவற்றையும்  சொல்லிக்கொண்டே வந்து இறுதியில் இவரும் இந்தியாவில் எல்லா பிரச்சனைகளும் தீர கம்யூனிஸ்ட் அரசாங்கம் வேண்டும் என்று முடிவுக்கு வருகிறார்.சரி அது அவரது எண்ணம்.எனினும் இவரது அந்த இறுதி முடிவை தவிர்த்து விட்டு பார்த்தால் இது மிக முக்கியமான புத்தகம். ஜாரெட் டைமண்டின் துப்பாக்கிகள், கிருமிகள் மற்றும் எக்கு என்ற புத்தகம் போல மிக  விரிவாய் எழுதவில்லை எனினும் நம்பும் படியாகவே இருக்கிறது.1967இல் வெளிவந்த இந்த புத்தகம் அதற்கு முன் கிடைத்துள்ள அகழ்வாராய்ச்சி சான்றுகள்,பிற புத்தகங்களை கணக்கில் கொண்டு எழுதப்பட்டுள்ளது.பின் வந்த 40 ஆண்டுகளில் எவ்வளவோ புதிய தொல்பொருள் சான்றுகள் கிடைத்து முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் இருக்கலாம். இருந்தாலும் இந்த புத்தகத்தில் அவர் சொல்லும் கருத்துக்களை எனது மூளையில் ஏற்ற, இங்கு தொகுத்து சொல்கிறேன்.

எல்லா நாகரீகங்களும் நதிக்கரையிலேயே தோன்றுகின்றன.வேட்டையாடி திரிந்த மக்கள் விவசாயத்தை கண்டறிந்து, விவசாயம் செய்யும் இடங்களுக்கு அருகே தங்கள் இருப்பிடத்தை அமைத்தனர்.விவசாயம் செய்ய சிறந்த இடம் நதியை சுற்றியுள்ள பகுதிகள்.இவ்வாறு தங்களுக்கு நிரந்தர இருப்பிடத்தை அமைத்து, குடும்பங்கள் பெருகி, தேவை கண்டுபிடிப்பை உருவாக்கி, நாகரீகம் அடைந்தனர்.அப்படி சிந்து நதியைச் சுற்றி  உருவான நாகரீகமே சிந்து சமவெளி நாகரீகம்.அப்போது இந்தியாவில் பிற நதிகளைச்  சுற்றி நாகரீகம் உருவாக சாதகமான சூழ்நிலை அமையவில்லை.நதிகளை சுற்றி அடர் காடுகள் இருந்தமை, அதனை அழிக்க தேவையான கருவிகள் இல்லாமை போன்றவை காரணம்.பின் ஆரியர்களின் வருகை நிகழ்கிறது.ஆரியர்கள் என்பவர்கள் இன்றைய ஈரான் மற்றும் அதனை சுற்றியுள்ள  பகுதியில் வாழ்ந்து  வந்தவர்கள். இவர்களில் சிலர் கிழக்கில் இந்தியாவை நோக்கியும் மேற்கில் ஐரோப்பாவை நோக்கியும் பரவுகிறார்கள்.இவர்கள் சிந்த சமவெளி மக்களுடன் போரிட்டு வென்று அவர்களுடன் கலந்து விடுகிறார்கள்.ஆரியர்கள் என்பவர்கள் ஒரு குழு அல்ல.பல தனித்தனி கோத்திரங்களாக தொடர்ந்து உள்ளே வந்து கொண்டு இருக்கிறார்கள்.ஏற்கனவே இங்கே இந்தியாவில் இருந்த கோத்திரங்களை வென்று அதில் பரவி பின் மேல் நோக்கி முன்னேறி அடுத்த கோத்திரத்துடன் சண்டையிட்டு பரவி இப்படி முன்னேறுகிறார்கள். பரவுதல் என்று கூறும் போது அவர்கள் ஏற்கனவே அங்கு இருந்த,அவர்களால் தோற்கடிக்கப்பட்ட மக்களுடன் கலந்து விடுகிறார்கள்.தம் கலாச்சாரத்தை அவர்களிடம் கொடுத்தும், அவர்களிடம் இருந்து எடுத்தும், அவர்களிடம் உறவு ஏற்படுத்திக் கொண்டும் கலந்து விடுகின்றனர்.இப்படி வட இந்திய முழுவதும் பரவுகிறார்கள்.இந்த கட்டம் வேதங்கள் உருவாகிய கால கட்டம் என்பதால் வேத காலம் என்று கூறுகிறார்கள். இவ்வாறு அவர்கள் வென்ற கோத்திரத்தை வழிநடத்த, பாதுகாக்க வீரர்களும்,சமூக சடங்குகள் செய்பவர்களும் அதே கோத்திரத்தில் விட்டுச்சென்றார்கள்.இவர்களே பிற்காலத்தில் சத்ரியர்களும்,பிராமணர்களும் ஆகிறார்கள். ஆரியர்கள் அல்லாத சமூகத்தினர் பின்பற்றி வந்த விவசாயம், கைத்தொழில்கள் ,வியாபாரம் ஆகியவைகளை உட்கொண்டு ஒரு பகுதியினர் உருவானர்.அவர்களே பிற்பாடு வைசியர்களாக மாறினர்.தோற்கடிக்கப்பட்ட கோத்திரத்தை சேர்ந்தவர்கள் சூத்திரர்கள் ஆகிறார்கள்.இவர்கள் பிற வேலைகளை செய்ய பணிக்கப்பட்டார்கள். இவ்வாறு சமூகத்தில் வர்ண வேறுபாடுகள் உருவாகின்றன.இந்த வர்ண வேறுபாடு எல்லா கோத்திரங்களிலும் உருவாகின்றன. நாளடைவில் கோத்திரங்கள் இணையும் போது வர்ணங்களுக்கு இடையேயான உறவு ஏற்படுவதற்கு பதிலாக இரு கோத்திரங்களின் ஒரே வர்ணங்களுக்கு இடையேயான உறவு ஏற்பட்டது. இவ்வாறு ஒரு கோத்திரம் மற்ற பல கோத்திரங்களை வென்று சிற்றரசாகவும் ,ஒரு சிற்றரசு பல சிற்றரசுகளை வென்று பேரரசாகவும் மாறுகிறது. வர்ணங்களுக்கு இடையேயான பிரிவினை அதிகரித்தது.நாகரீகம் வளர வளர புதிய தொழில்களுக்கான தேவை அதிகரித்தது.வெவ்வெறு புதிய தொழில்கள் தோன்றின.இவ்வாறு வர்ணங்களில் செய்யும் தொழிலைச் சார்ந்து வெவ்வேறு புதிய ஜாதிகள் தோன்றின.பொதுவாக வர்ணங்களுக்கிடையே பிரிவினை இருந்த போதும்,ஒருவர் ஒரு வர்ணத்தில் இருந்து இன்னொரு வர்ணத்திற்கு போவது சாதாரணமாக இருந்தது.உதாரணமாக சூத்திர வர்ணத்தை சேர்ந்த ஒருவன் படை திரட்டி இன்னொரு அரசை வென்று சத்ரியனாக முடிந்தது.அல்லது பணம் சேர்த்து வணிகத்தில் ஈடுபடும் பொது வைசியனாக முடிந்தது.இந்த வகையான பிரிவினை அப்போதிருந்த ஆளும் வர்க்கத்தினருக்கு தேவைப்பட்டது.எனவே இது வேதங்கள் மூலமும்,புராணங்கள் மூலமும், மதம் மூலமும்  வரையறுக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டது. சுரண்டப்படுபவர்களுக்கும் சுரண்டுபவர்களுக்கும் இடையே பிரிவினை ஏற்பட்டது.

இந்த பிரிவினை இந்தியாவில் மட்டும் தோன்றியது அல்ல.உலகெங்கிலும் இருந்ததுதான்.மற்ற இடங்களில் பண்ணை ,அடிமை முறையாகவும் ஆனால் இங்கு ஜாதி அடுக்குமுறையாகவும் இருந்தது.பண்ணை-அடிமை முறையை காட்டிலும் ஜாதி அடுக்குமுறை அவ்வளவு கொடூரமானதாக இல்லை என்று ஆசிரியர் ஒத்துக்கொள்கிறார்.ஆயினும் பண்ணை-அடிமை முறை சென்ற நூற்றாண்டில் முற்றிலும் ஒழிந்து விட்டது.ஆனால் ஜாதி இன்னும் இங்கு முக்கிய சக்தியாகவே இருந்து வருகிறது. மற்ற நாடுகளை போல இந்தியாவில் நேரடியான நிலப்பிரபுத்துவ ஆட்சி வரவில்லையானாலும் மறைமுகமாக இருந்ததே உண்மை.அந்த காலங்களில் நிலம் விவசாயிகள் சிலருக்கு சொந்தமாகவும் அல்லது அரசாங்கத்தின் நிலத்தில் விவசாயம் செய்தும் வந்தனர்.இதில் அரசாங்கத்திற்கு நிலத்திற்கு வாடகை ,உற்பத்தி வரி,லாபத்தில் பங்கு என்று கொடுக்க வேண்டியது இருந்தது.இதனால் மன்னருக்கு பதிலாக சிலர் அந்த வரிகளை வாங்கி மன்னரிடம் கட்ட வேண்டும் என்று நியமிக்க பட்டனர்.இவர்கள் ஜமீன்தார்களை போல்,நிலப்பிரபுக்களை போல் செயல்பட்டனர். இந்த அரைகுறை நிலப்பிரபுத்துவத்திலிருந்து முதலாளித்துவத்திற்கு மாற ஆங்கிலேயர்களின் வருகை தேவையாயிருந்தது.

வேதகாலம் தோன்றி வளர்ந்த காலத்தில் தென் இந்தியாவில் நாகரீகம் தோன்றி அரசுகள் ஆட்சிகள் செய்ய தொடங்கி விட்டிருந்தன.ஆரியர்களின் கலப்பினால் இங்கும் வர்ண வேறுபாடு தோன்றி விட்டிருந்தது.வட இந்திய நாகரீகம் தென் இந்திய நாகரீகத்தை விட முன்னேறித்தான் இருந்தது.அங்கு வேதங்கள் தோன்றி பல வருடங்களுக்குப் பின்பு தான் முதலில் தமிழில் சங்க இலக்கியங்கள் தோன்றின.சம்ஸ்கிருதம் அவர்கள் மொழியாக இருந்திருக்கிறது.தென் இந்தியாவில் பல அறிஞர்கள் சமஸ்கிருதத்தில் புலமை பெற்றிருந்தனர். பொதுவாக ஆரியர்கள் இந்திய முழுக்க,தென்னிந்தியாவிலும் கூட பரவி விட்டிருந்தனர்.உண்மையில் இப்போதுள்ள ஆரியர்,திராவிடர் என்பதை ஆரியர்,ஆரியல்லாதோர் என்று கணக்கிட முடியாது.உண்மையில் இது சமஸ்கிருதத்தை மூலமாக கொண்டு உருவான மொழிகளை பேசுவோர், தமிழை மூலமாக கொண்ட மொழி பேசுவோர் என்றே பிரித்தறிய முடியும் என்று ஆசிரியர் கூறுகிறார்.ஆங்கிலேயர்கள் இந்தியாவில் வணிகம் செய்வதற்காக வந்து பின் அதிகாரத்தை கைப்பற்றி தனது காலனி நாடாக ஆக்கிக்கொண்டனர். இந்தியா எத்தனையோ அன்னியப்படையெடுப்புகளை கண்டுள்ளது.ஆனால் எவராலும் வர்ண,ஜாதிய வேறுபாட்டில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.அவர்கள் அதை மாற்ற முயல வில்லை. மாறாக அவர்கள் இந்த பண்பாட்டை ஏற்றுக்கொண்டு இதில் ஈடேற கலந்தனர்.இதனால் ஆட்சியில் இருந்தவர்களுக்கு லாபம் இருந்தது. ஆனால் ஆங்கிலேயர்களால் இந்த கலாச்சாரம் ஆட்டம் கண்டது என்பது உண்மை.ஏகாதிபத்திய நாடுகள் பிற நாடுகளை பிடிக்க காரணம் தனக்கான உற்பத்தி ,சந்தையை உருவாக்கிக் கொள்வதே ஆகும்.  ஆங்கிலேயர்களின் சமூக அமைப்பு முதலாளித்துவ அமைப்பு.அவர்களின் முக்கியமான தேவை கட்டற்ற உற்பத்தி.அதற்கு தடையாக இருந்தது நிலப்பிரபுத்துவ ஜாதிய கட்டமைப்பு.நிலப்பிரபுத்துவதில் உற்பத்தி சுய தேவைகளுக்காக மட்டுமே செய்யப்படுபவையாக இருந்தது.மிக குறைந்த அளவே வெளியே எடுத்து செல்லப்பட்டது.அதனால் ஆங்கிலேயர்களுக்கு இதை தகர்க்காமல் முதலாளித்துவத்தை நிலைநாட்ட முடியாது.ஓரளவு அதில் வெற்றியும் பெற்றனர்.தற்போதைய இந்தியா முதலாளித்துவ பொருளியலையும்,நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளையும் கலந்து கட்டி ஒரு புதிய அமைப்பாக உள்ளது.யாரோ சொல்லி இருந்தார்கள் இந்தியா ஒரு மலைப்பாம்பு போல.அதன் தலை இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும்,வால் பதினெட்டாம் நூற்றாண்டிலும் உள்ளது என்று.உண்மைதான்.

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s