அர்னால்ட் : டோட்டல் ரீகால் -1

arnold

சில மாதங்களுக்கு முன்பு தினமும் எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதை கணக்கிடுவதற்காக வரவு செலவு கணக்குகளை எழுத தொடங்கினேன்.மாத முடிவில், முதல் மாதம் கணக்கிட்டு பார்க்கையில் கணக்கில் 650ரூபாய் இடித்தது.அடுத்த மாதம் 400ரூபாய்.எப்படி யோசித்து பார்த்தாலும் எங்கு விட்டோமென கண்டுபிடிக்க முடியவில்லை.எங்கயாவது செலவு பண்ணிருப்போம். அப்புறம் கணக்கு எழுதுவதை நிறுத்திவிட்டேன்.

எனக்கு கை ஓட்டை.என் அண்ணனோ எனக்கு மேல்.தனியாக பிசினஸ் ஆரம்பித்தான். அதற்கே வரவு செலவு கணக்கு எழுதவில்லை.கடைசியில் நஷ்டம் அடைந்தது தான் மிச்சம்.குடும்ப வியாதி போல என்றால் அதுவும் இல்லை.என் அப்பாவுக்கு வரவு செலவு எழுதும் பழக்கம் இருந்தது. இருக்கிறது.தினமும் காலையில் பல் தேய்த்தவுடன் முதல் வேலை அது தான்.கையில் பெரிய நோட்டு புத்தகத்துடன் அமர்ந்து விடுவார்.முதல் நாள் வரவு செலவு முழுவதையும், மளிகைபொருள் செலவு 362ரூபாய், வெங்கடேஷுக்கு செலவுக்கு கொடுத்தது 300ரூபாய் என்று எழுதி விடுவார்.வெங்கடேஷ் என் அம்மா தான்.இந்த வரவு செலவு கணக்கால் அதிகம் பாதிக்க படுவது என் அம்மா தான்.ஏனெனில் நான் என் அம்மா பையில் தான் கை வைக்க முடியும்.அப்பா கண்டுபிடித்து விடுவார்.அம்மா என் மாதிரி.இல்லை நான் என் அம்மா மாதிரியாக இருக்கலாம்.

ஆனால் என் நண்பர்கள் சிலருக்கு எவ்வளவு செலவழித்தோம், எவ்வளவு இருக்கிறது என்று மனக்கணக்காகவே தெரியும். போன வெள்ளிக்கிழமை பேங்க்ல இருந்து 500ரூபாய் எடுத்தேன். இப்போ நாலாறுவா கொறயுதே என்பார்கள்.அவர்கள் தினம் வெளியே கிளம்புகையில் கையில் 100ரூபாய் எடுத்துக்கொண்டு செல்வார்கள். எப்படி இதை முடிவு செய்கிறார்கள் என்று தெரிய வில்லை. 100ரூபாய் தான்.அதற்கு மேல் செலவு வராதா?அவர்களுக்கு வராது போலத்தான்.நான் வெளியே போகும்போது இருக்கும் எல்லா பணத்தையும் எடுத்து கொண்டு தான் போகிறேன்.எப்போ என்ன செலவு வருமோ என்று?அவர்கள் பாக்கியவான்கள்.

வரவு செலவு கணக்கு பார்க்கையில் மாதத்தின் முதல் நாள் சம்பளம் மட்டும் தான் வரவு.மற்றபடி அனைத்தும் செலவு தான்.வேறுவகையிலும் சம்பாதிக்க என்ன செய்யலாம். எனக்கு பறக்க தெரியும்.ஆனால் மண்ணில் காலூன்றி நிற்கவும் கற்றுக் கொள்ள வேண்டுமே. லௌகீக வாழ்க்கைக்கு பணம் அவசியம்.சிறிது நாள் இந்த இலக்கியத்தை மூட்டை கட்டி விட்டு ஏதேனும் தன்னம்பிக்கை புத்தகத்தை படிக்கலாம். சுயமுன்னேற்ற நூல்களில் எனக்கு விருப்பம் இல்லை.ஏதேனும் சுயசரிதை படிக்கலாம். ப்ரூஸ் லீ. ஆனால் இரண்டு மாதத்திற்கு முன்பு தான் தமிழில் ஆர்.அபிலாஷ் எழுதிய ப்ரூஸ் லீ பற்றிய புத்தகத்தை படித்து முடித்தேன் . அருமையான புத்தகம்.ஸ்டீவ் ஜாப்ஸ், மார்க் சக்கர்பர்க்,பில் கேட்ஸ் ,அம்பானி.ம்ஹ்ம். யார் வாழ்க்கை மேலும் அவ்வளவு பெரிய விருப்பம் இல்லை.அப்பொழுது மாட்டியது இந்த புத்தகம்.டோட்டல் ரீகால்.அர்னால்டின் சுயசரிதை.ஆஸ்திரியாவின் ஏதோ மூலையில் பிறந்து கடைசியில் அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தின் கவர்னர் ஆனார்.பாடி பில்டிங் , பிசினஸ், அரசியல், சினிமா என்று தொட்டதில் எல்லாம் உச்ச நட்சத்திரமாக இருந்தார். கண்டிப்பாக அர்னால்டு எனக்கு ரோல் மாடல் தான். ப்ரூஸ் லீயும் தான்.

நானும் வெகுநாட்களாக ஜிம்க்கு சென்று எட்டி பார்த்து வருகிறேன்.இதை தான் படிக்க வேண்டும் என்று முடிவெடுத்து வாங்கிவிட்டேன்.மொத்தம் 656 பக்கங்கள். ஆங்கிலத்தில்.ரொம்ப கஷ்டம்தான்.பாடிபில்டிங்,சினிமா எல்லாம் நம்ம ஏரியா.அதனால் முதல் சில பாதி பக்கங்கள் விர்ரென்று சென்று விட்டது . அடுத்து பிசினஸ் மற்றும் அமெரிக்காவின் அரசியல்.மிக மெதுவாகத்தான் செல்ல முடிந்தது.எப்படியோ மூன்று மாதத்தில் முடித்து விட்டேன்!இந்த சுயசரிதையில் எந்த அளவிற்கு நேர்மை இருக்கிறது என்று தெரியவில்லை. முக்கியமாக அரசியல் பற்றி சொல்லும் போது முழுக்க முழுக்க மக்களுக்காகவே பணியாற்றியதை போல் சொல்கிறார்.சர்ச்சைக்குள்ளான அவரது ஏழாவது ஒலிம்பியா சாம்பியன் போட்டி பற்றியும் பெரிதாக எதுவும் சொல்லாமல் கடந்து சென்று விடுகிறார்.வீட்டு பணிப்பெண்ணுடன் இருந்த பாலியல் உறவையும், ஏதோ ஒரு நாள் விபத்து போல் சொல்லி செல்கிறார்.இந்த புத்தகத்தை படிக்கும் போது If he can’t win then who will என்ற எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. சில ஆண்களுக்கு மற்ற எல்லோரையும் தனக்கு கீழ் வைத்து கிண்டலாக பேசும் மனப்பான்மை இருக்கும்.கிட்ட தட்ட superiority complex.அதே மனநிலை அர்னால்டிடமும் இருக்கிறது. தன்னை எப்போதும் ஸ்பெஷல்,unique என்றே எண்ணுகிறார்.

அர்னால்ட் ஆஸ்திரியாவில் “Thal” எனும் சிறிய கிராமத்தில் பிறந்தவர்.நடுத்தர வர்க்கத்திற்கும் கொஞ்சம் கீழுள்ள குடும்பம்தான்.குடும்பத்தின் இரு பையன்களில் இளையவர்.அப்பா ஒரு போலீஸ் அதிகாரி.நாஜி.மிகவும் கண்டிப்பானவர். ஏதேனும் சிறிய தவறு செய்தால் கூட பிரம்பை எடுத்து பின்னி விடுகிறார்.ஆரம்பத்தில் இருந்தே அர்னால்டு அவர் அப்பாவை வெறுக்க தொடங்குகிறார்.இறுதியில் அவரது அப்பாவின் இறுதி சடங்குக்கு வராத அளவுக்கு அது போய் விடுகிறது.ஆனால் அவரது அம்மாவிடம் இறுதிவரை பாசமாகவே இருக்கிறார்.தனது பதினான்காவது வயதில் அவருக்கு பாடிபில்டிங் அறிமுகமாகிறது.பதினேழாவது வயதில் இருந்து தீவிர போட்டிகளில் கலந்து கொள்ள துவங்குகிறார்.

இப்போது போல் பாடிபில்டிங் அப்போது பிரசித்தி கிடையாது.சிலரே உடற்பயிற்சிக்கு வருவர்.அதிலும் வெகு சிலரே பாடிபில்டிங்கில் ஈடுபட்டனர்.அர்னால்டுக்கோ நாளுக்கு நாள் பாடி பில்டிங்கின் மீது நாட்டம் தீவிரமாகி கொண்டே போகிறது.பாடிபில்டிங் பற்றி புத்தகங்கள் வாங்கி படிப்பது,பாடிபில்டர் படங்களை அறையில் ஒட்டி வைப்பது என்று இருக்கிறார்.அவரது அறையில், ஜட்டியுடன் உடலை காட்டிக்கொண்டு நிற்கும் பாடிபில்டர் படங்களை பார்த்துவிட்டு, அவரது அம்மா அவர் gay ஆகி விட்டாரோ என்று கவலைப்படுகிறார்.பிறகு ஒரு தடவை தனது பெண் தோழியுடன் சரசத்தில் ஈடுபட்டிருக்கும் போது பிடிபட்டு அம்மாவிடம் வாங்கிக்கட்டி கொள்கிறார்.அவருக்கு பதினெட்டு வயது பூர்த்தியானவுடன் ஆஸ்திரியாவின் ஒரு வருட கட்டாய ராணுவ சேவையில் சேர்ந்து, டேங்க் ஓட்டுனராக பணியாற்றுகிறார். பாடிபில்டிங் போட்டிகளிலும் தொடர்ந்து கலந்து வெற்றி பெற்று, இவர் புகழ் ஐரோப்பா எங்கும் பாடிபில்டர் மத்தியில் பெருகுகிறது.

அர்னால்டு அவரது ஊரை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்.அவரது கனவு அமெரிக்கா செல்வது என்பது தான்.அங்கு பெரிய ஸ்டார் ஆவது.எல்லா வகையிலும் அமெரிக்கா செல்ல வழியை தேடி கொண்டே இருக்கிறார்.ஒரு கட்டத்தில் பாடிபில்டிங்தான் தான் அமெரிக்கா செல்வதற்கு டிக்கெட் என்பதை புரிந்து கொள்கிறார்.1966இல் லண்டனில் நடைபெற்ற மிஸ்டர் யூனிவெர்சில் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை பெறுகிறார். அப்போது அவருக்கு வயது பத்தொன்பது. அதில் ஜட்ஜ் ஆக இருந்த ஒருவர் அவரது ஜிம்களில் ஒன்றை பார்த்துக்கொள்ளும் படி அவரை கேட்க லண்டனிலேயே தங்கி ஜிம்மையும் கவனித்து கொண்டு பயிற்சியும் செய்து அடுத்த வருடம் 1967இல் தனது முதல் மிஸ்டர் யூனிவெர்ஸ் பட்டம் பெறுகிறார்.மிக இளம் வயதில்,இருபது வயதில்,மிஸ்டர் யூனிவெர்ஸ் பட்டம் வென்றது இவர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த சாதனை இன்னும் யாராலும் முறியடிக்கப் படவில்லை.

ஜிம்மில் வேலை பார்த்த போது தினமும் ஐந்து மணிநேரம், அதிகாலை மற்றும் இரவு எல்லோரும் சென்ற பின், இவ்வாறு வாரத்திற்கு ஆறு நாட்கள் பயிற்சி செய்வாராம்.(ஆனால் இப்போதெல்லாம் ஜிம்களில் வாரம் ஐந்து நாட்கள் தான் ட்ரெயின் பண்ண சொல்கிறார்கள். இரண்டு நாள் கண்டிப்பாக ரெஸ்ட்). ட்ரைனிங்கின் போது புதிய ஒர்க் அவுட் முறைகளை கண்டறிந்து ரிசல்ட் தருகிறதா என முயற்சி செய்கிறார். 1968இல் இரண்டாவது முறை மிஸ்டர் யூனிவெர்ஸ் வென்ற உடன் அவருக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு கடிதம் வருகிறது.அதில் அந்த ஆண்டு அமெரிக்காவில் மியாமி நகரில் நடைபெறும் பாடிபில்டிங் போட்டியில் கலந்து கொள்ள முடியுமா என்றும், அப்படி வந்தால் எல்லா செலவையும் தானே ஏற்றுக்கொள்வதாகவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.அர்னால்டு எதிர்பார்த்தது போலவே அவரது அமெரிக்கா செல்லும் கனவின் டிக்கெட் பாடிபில்டிங் என்றானது.அந்த கடிதத்தை அனுப்பி இருந்தவர்  Joe Weider. இந்த Joe Weider தான் மிஸ்டர் ஒலிம்பியா போட்டியை தொடங்கி, நடத்திக் கொண்டிருப்பவர். இவர் பாடிபில்டிங் ரசிகர் மட்டுமல்லாமல் பாடிபில்டிங் மேகஸின்,nutrition supplements, equipment விற்பனை செய்யும் பிஸினஸும் செய்து வருபவர் .

அதுவரை மற்ற பாடிபில்டிங் போட்டிகளில் வென்றவர்களுக்கு வெறும் கோப்பைகள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தன.முதன் முதலில் மிஸ்டர் ஒலிம்பியாவில் ரொக்க தொகை வெற்றிபெறுபவர்களுக்கு வழங்கப்பட்டது. அப்போது 1000 அமெரிக்கா டாலர்.(2016இல் இது 400000 அமெரிக்கா டாலர்) இதுவே மிஸ்டர் யுனிவெர்சை காட்டிலும் மிஸ்டர் ஒலிம்பியா கொண்டாடப்படுவதற்கு காரணம் என்று நினைக்கிறேன். 1968இல் தனது இருபத்தியோராவது வயதில் அமெரிக்கா செல்கிறார் . மியாமியில் நடந்த போட்டியில் இரண்டாவது இடத்தை பெறுகிறார்.முதல் இடத்தை பிடித்தவனை விட தான் எந்த விதத்திலும் குறைவில்லை என்றும், வெற்றி ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது என்றும் நினைக்கிறார்.போட்டி முடிந்தவுடன் Joe weider அவரை சந்திக்கிறார். Joe weider யிடம் நாளுக்கு மூன்று வேளையாக பிரித்து பயிற்சி செய்யும் தனது Split training, muscle shock போன்ற ட்ரைனிங் முறையை பற்றி அர்னால்டு விளக்குகிறார்.சந்திப்பின் முடிவில் Joe weider அர்னால்டிடம் அமெரிக்காவில் இருந்து திரும்பி செல்ல வேண்டாம் என்றும்  ஒரு வருடம் அமெரிக்காவில் இருந்து பிற சாம்பியன்களுடன் சேர்ந்து  ட்ரெயின் செய்யுமாறும் தங்க இடம்,கார்,மற்ற செலவுகள் எல்லாவற்றையும் தான் ஸ்பான்ஸர் செய்வதாகவும், அதற்கு பதில் தான் நடத்தும் பாடிபில்டிங் இதழில் தனது ட்ரைனிங் முறையை பற்றி அவ்வப்போது கட்டுரை எழுதுமாறும் கேட்டுக்கொள்கிறார்.அதற்கு சம்மதித்து Joe weiderஇன் விருப்பப்படி கலிபோர்னியாவுக்கு இடம் பெயர்கிறார்.(அதன் பின் பதினைந்து ஆண்டுகள் கழித்து அமெரிக்க குடியுரிமை பெற்று அமெரிக்கக் குடிமகனாக மாறுகிறார்.)

கலிஃபோர்னியாவில் கோல்ட் ஜிம்மில் தனது பயிற்சியை ஆரம்பிக்கிறார். பாடிபில்டிங்கை பற்றி கேள்வி பட்டிருப்பவர்களுக்கு கோல்ட் ஜிம் பற்றியும் கேள்வி பட்டிருப்பார்கள்.அப்போதே அந்த ஜிம் பிரபல்யம்.கோல்ட் ஜிம்மை பற்றி பல கற்பனைகளோடு போகிறார்.உலக சாம்பியன்கள் எல்லாம் பயிற்சி செய்யும் இடம். பாஸ்கெட் பால் கோர்ட்,நீச்சல் குளம்,ஜிம்னாசியம் என்று இப்போதைய மாடர்ன் ஜிம்களைப் போல்  தனி தனி பிரிவாக இருக்கும் என்று நினைக்கிறார்.ஆனால் அது இரண்டு சிறிய அறைகள் கொண்ட,சிமெண்ட் தரை போடப்பட்ட மொத்தமே பாஸ்கெட் பால் கோர்ட்டின் பாதி அளவுக்குத்தான் இருந்தது.ஆனால் முன்னணி சாம்பியன்கள் பலரும் அங்கு தான் பயிற்சி செய்து கொண்டு இருந்தனர்.ஜிம்க்கான உடைகள் என்று இல்லாமல்  ஜீன்ஸ் அணிந்து கொண்டும், சட்டை அணிந்து கொண்டும்,பனியனோடும் விருப்பப்படி அணிந்து பயிற்சி செய்வார்கள்.இவர்களில் பலர் அர்னால்டை போல் Joe weider அழைப்பின் பேரில் வந்தவர்கள்.

ஜிம்இன் அளவோ,equipment மேட்டர் இல்லை. நம்மை சுற்றி இருப்பவர்கள் தான் முக்கியம்.அவர்கள் தான் நமக்கு எனர்ஜியையும், உத்வேகத்தையும், போட்டியையும் கொடுப்பார்கள் என்று உணர்கிறார். (ஜிம்க்கு போகிறவர்களுக்கு தெரிந்திருக்கும். ஏனெனில் ஓவரா ஒர்க் அவுட் பண்ணா ஆண்மை போய்டும், ப்ரோடீன் சாப்பிட கிட்னி பெயில் ஆகிடும்,விட்டா உடம்பு ஊதிடும் என்று குத்த வைத்த இடத்திலிருந்து குண்டியை தூக்காத ஒரு கோஷ்டி சொல்லிக்கொண்டு திரியும்.இவர்கள் மற்றவர்களையும் கெடுத்து விடுவார்கள்).

1969இல் தனது இருபத்திரண்டாவது வயதில் மிஸ்டர் ஒலிம்பியா போட்டியில் கலந்து கொண்டு தனது ரோல் மாடல் ஆன Sergio Olivaவிடம் பட்டத்தை தவற விட்டு இரண்டாம் இடத்தை பிடித்தார்.அடுத்த வருஷம் அதே Sergio Olivaவை தோற்கடித்து முதல் முறையாக மிஸ்டர் ஒலிம்பியா பட்டம் பெறுகிறார்.பின் தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் மொத்தம் ஆறு முறை மிஸ்டர் ஒலிம்பியா பட்டம் பெற்று 1975இல் பாடிபில்டிங்கில் இருந்து தனது ரிடைர்ட்மென்டை அறிவிக்கிறார். இதன் மூலம் ஏராளமான பாடிபில்டிங் ரசிகர்களை பெற்றிருந்தார்.(ஏழாவது முறை பெற he will be back)..(தொடரும்)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s