வெண்ணிற இரவுகள்: ரஷ்யப்பயணம் -1

அடுத்து பயணத்திற்கு எங்கு செல்ல வேண்டும் என்பது எனக்கு பெரும்பாலும் திடீரென்று தற்செயலாகவே அகப்படுகிறது.அப்படிதான்  ரஷ்யப்பயணமும்.ஒரு நாள் தற்செயலாக ரஷ்ய பணத்தின் மதிப்பை எதற்கோ தேடப்போய் அது கிட்டத்தட்ட இந்திய ரூபாயின் மதிப்பிற்கே இணையாக இருந்து பின் விமான பயணத்திற்கான செலவு, விசா போன்றவற்றை தேடி எல்லாம் நமக்கு சாதமாக இருக்க சரி போகலாம் என்று முடிவு செய்தேன்.விசாவுக்கு ரஷ்யாவிலிருந்து ஒரு இன்விடேஷன் வாங்க வேண்டும்.அதையும் ஆன்லைனில் வாங்கி கொள்ளலாம். விமானச்சீட்டு, ரஷ்யாவில் தங்க ஹோட்டல் முன்பதிவு  அது மட்டும்தான். இப்போது இருக்கும் கம்பெனியில் ஓரளவு எனக்கு நல்ல பெயர்.நான் அடிக்கடி பயணம்  போவதும் எனது மேலாளருக்கு தெரியும்.அதனால் எப்படியும் விடுப்பு கொடுத்துவிடுவார்கள் என்று மூன்று மாதங்கள் தள்ளி குறைவாக விமானச்சீட்டு விலை இருக்கும் நாளில் ரஷ்யாவின் முக்கியமான இரு நகரங்களான மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் செல்ல முடிவெடுத்து முன்பதிவு செய்து விட்டேன்.Nonrefundable டிக்கெட் மிக மிக குறைவாக  இருந்ததனால் அதையே போய் வர பதிவு செய்து வைத்திருந்தேன்.ஏதேனும் காரணத்தால் போக முடியாமல் போனால் மொத்தமாக கோவிந்தாதான். அறையும் ஹாஸ்டெலில் நான்கு பேர் தங்கும் அறையில் ஒரு படுக்கை பதிவு செய்து விட்டேன்.ஹோட்டல் என்றால் செலவு எகிறிவிடும்.

எப்போதும் போல நான் மட்டும் தான் தனியாக பயணம்.அதனால் முன்பதிவில் எந்தக்   குழப்பமும்  இல்லை. பின் சென்னையில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.பெரிய நிம்மதி பேங்க் ஸ்டேட்மென்ட் கேட்க மாட்டார்கள்.மற்ற சில நாடுகளுக்கு,குறிப்பாக ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு விசா பெற கடைசி ஆறு மாத பேங்க் ஸ்டேட்மென்ட் கேட்ப்பார்கள். அதில் இருக்கும் பண பரிவர்த்தனை பார்த்துதான் விசா வழங்கவா? வேண்டாமா? என்று முடிவு செய்வார்கள்.நான் சொல்வது டூரிஸ்ட் விசாவுக்கே. அந்த ஆறு மாதமும் கணக்கில் குறைந்த பட்சம் இரண்டு லட்சம் ரூபாய் இருப்பில் இருக்க வேண்டும்.என்றால் தான் விசா தருவார்கள்.என் கணக்கில் ஏது அவ்வளவு பணம்.மாதம் முதல் தேதி மட்டும் சம்பளம் வரும்.இருபதாம் நாள் சுத்தமாக காலியாக இருக்கும். அப்புறம் கிரெடிட் கார்டைதான்  தேய்க்க வேண்டியது இருக்கும்.விண்ணப்பித்த மூன்றாம் நாளே எந்த சிரமமும் இல்லாமல் விசா கிடைத்து விட்டது.எனது பாஸ்ப்போர்ட்டில் நிறைய ஸ்டாம்புகள் இருந்தது காரணமாக இருக்கலாம். இனி பயணத்திற்கான ஏற்பாடுகள் செய்யவேண்டும்.

ரஷ்யாவைப் பற்றி எனக்கு தெரிந்தது ஹாலிவுட் படங்களில் வில்லன்கள் , எஸ்.ராமகிருஷ்ணன் மூலம் ருஷ்ய இலக்கியம், சைபீரியா பனி, ட்ரான்ஸ்-சைபீரியன் ரயில்வே,லெனின் ,ஸ்டாலின்,கம்யூனிசம், சோவியத் யூனியன்  இவை தான்.எஸ்ரா விடமிருந்து ருஷ்ய இலக்கிய உரை,அவரது கட்டுரை மூலம் ரஷ்ய கனவு இருந்த போதிலும் (சாருவிடமிருந்து பிரான்ஸ்) ருஷ்ய இலக்கியங்கள் ஏதும் படித்ததில்லை.ஏழு வருடங்களுக்கு முன்பு ஒரு முறை மாக்ஸிம் கார்க்கியின் தாய் படித்தேன்.அப்போது சுத்தமாக புரியவில்லை. இப்போது அந்த நாவலில் சப்பாத்து என்ற வார்த்தை தவிர எதுவும் ஞாபகம் இல்லை. ஆனால் எப்போதும் தஸ்தயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவல் எனக்கு படிக்க வேண்டுமென விருப்பமாகவே இருந்தது.இது தான் சரியான நேரம் என முடிவு செய்து செல்வதற்கு ஒரு மாதம் முன்பு ஆர்டர் செய்து வாங்கிவிட்டேன்.ஆங்கிலத்தில் படிக்க முயன்று முடியவில்லை என்பதால் எம்.சுசிலா அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு.தலையணை அளவு புத்தகம்.  இதன் ஆங்கில மொழி பெயர்ப்பே கிட்டதட்ட 600 பக்கங்கள்.தமிழில் கிட்டத்தட்ட 1100 பக்கங்கள்.எப்படியும் முடிக்க ஒரு மாத காலமாவது ஆகும் என்று கணக்கிட்டிருந்தேன்.ஆனால் நாவலும், அற்புதமான மொழிபெயர்ப்பும்  பத்து நாட்களில் முடித்துவிட்டு மீதமிருந்த நாட்களில் எனக்கு பிடித்த பகுதிகளை மீண்டும் படித்துக்  கொண்டிருந்தேன்.அந்த நாட்களில் வேறு புத்தகங்களையும் படிக்கவில்லை.ரஷ்யாவில் குற்றமும் தண்டனையும் நாவலின் கனவிலே இருக்க நினைத்தேன்.அந்த நாவலின் களம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரம்.பின் இணையதளத்தில் தேடி அந்த நாவல் நடந்த இடங்களை குறித்து வைத்து கொண்டேன். இது கற்பனையான நாவல் தான் என்றாலும் தஸ்தயெவ்ஸ்கி கதாபாத்திரங்களின் வீடுகள்,செயின்ட் பீட்டர்ஸ்பர்க் தெருக்கள்,இடங்கள்  இவையெல்லாம் உண்மையே.

நாவல் எழுதும் நேரத்தில் தஸ்தயெவ்ஸ்கி வசித்த வீடு,ரஸ்கொல்நிகோவ் வசித்ததாக நாவலில் சொல்லப்படுகிற வீடு,சோனியா மற்றும் வட்டிக்கடைக் கார கிழவியின் வீடு(மாடிக்கட்டிடங்கள்)  எல்லாம் இன்னும் இருக்கின்றன.செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நான் முன்பதிவு செய்திருந்த அறையை கேன்சல் செய்துவிட்டு ரஸ்கொல்நிகோவ் அறை இருந்த கட்டிடத்தின் தெருவிலிருந்து நான்கு தெரு தள்ளி இருந்த  ஹாஸ்டெலில் நான்கு படுக்கை உள்ள ஒரு அறையில் ஒரு படுக்கையை முன் பதிவு செய்து கொண்டேன். எம்.சுசிலா அவர்களின் வலைத்தளத்திலேயே அவர் ரஷ்யா சென்று வந்த பயணத்தைப் பற்றி எழுதியதையும் படித்து வைத்துக் கொண்டேன் .

பயண திட்டப்படி மாஸ்கோவில் நான்கு நாட்கள் மறுநாள் அங்கிருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கு புல்லட் ரயில்(Sapsan) பயணம்.அங்கு ஐந்து நாட்கள்.எந்த பிரச்சனையும் இல்லாமல் கம்பெனியில் விடுப்பும் கிடைத்து, புறப்பட வேண்டிய நாள் வந்தது.எப்போதுமே புறப்படுவதற்கு முந்திய நாளில் இருந்தே பயம் தொற்றிக்கொள்ளும்.தனியாக செல்வதால்(இப்போது அந்த பயமும் பழகிவிட்டது).அறையிலேயே comfortஆக இருக்கலாம் எதற்கு இந்த பயணம் என்று. அப்போதெல்லாம் காத்மண்டுவில்,  தனியாக சீனாவிலிருந்து வந்து பதிமூன்று நாட்கள் என்னுடன் ட்ரெக்கிங் செய்த பெண்ணையும்(நான் எட்டு நாட்கள் தான்),லே மணாலி சாலையில் சந்தித்திருந்த,  இந்தியாவில் தனியாக பயணம் செய்து கொண்டிருந்த சீன பெண்ணையும் நினைத்து கொள்வேன்.இந்தியாவில் தனியாக பயணம் செய்யும் எத்தனையோ வெள்ளைகாரிகளை பார்த்திருக்கிறேன்.ஆனால் சீனப்பெண்களை அப்போது தான் பார்த்தேன்.

ஜூலை மூன்றாம் வாரத்தில் பெங்களூரில் இருந்து முதலில் டெல்லி(பெங்களூரு விமான நிலையத்தின் உள்ளே விளம்பர பதாகைகளிலும் விமான சீட்டின் பின்புறமும்  மோடி கைகட்டி உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறார்),அங்கிருந்து மாஸ்கோவுக்கு விமானம். (குற்றமும் தண்டனையும் நாவலும் ஜூலை மாதத்தில் தான் நடக்கும்).டெல்லி விமான நிலையத்தில் போர்டிங் பாஸ் தரும் இடத்திலேயே, முதல் முறை ரஷ்யா செல்வதால், நிற்க வைத்து கேள்வி கேட்டு கேட்டார்கள்.எனது backpack மொத்தமே ஐந்து கிலோ தான் இருந்ததை பார்த்து விட்டு ரஷ்யாவில் பனி பெய்கிறது ஒரு ஸ்வெட்டர் கூட இல்லாமலா போகிறாய் என்று அங்கிருந்த அதிகாரி கேட்டார்.இப்போது அங்கு கோடைகாலம் 20 டிகிரி வெப்பநிலை.பனியெல்லாம் இல்லை.நான் இணையத்தில் பார்த்து விட்டேன் என்றேன். எனது ரிட்டர்ன் டிக்கெட் அறை முன்பதிவு எல்லாம் பார்த்து விட்டு போர்டிங் பாஸ் கொடுத்துவிட்டார்.இங்கும் எனது பாஸ்ப்போர்ட்டில் உள்ள நிறைய ஸ்டாம்பிங் தான் காப்பாற்றி இருக்கும்.

டெல்லியிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை மாஸ்கோ நேரப்படி ஒன்பது முப்பதுக்கு மாஸ்கோவை அடைந்தேன்.மாஸ்கோ இம்மிகிரேஷனில் எனக்கு முன் சென்ற நேபாளி துறவியிடம்  அவர்கள் ஏதோ கேட்க அவருக்கு ஆங்கிலமும் தெரியவில்லை, ரஷ்யனும் தெரியவில்லை.என்னை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து சொல்லுமாறு சொன்னார்கள்.நான் எனக்கு நேபால் மொழி தெரியாது என்று சொன்னேன்.இருவரும் வேறு வேறு நாடா என்று கேட்டுவிட்டு அவனை எங்கோ கூட்டி சென்று விட்டார்கள்.அடுத்து நான்.என்னிடம் ஒரு கேள்வி கேட்க வில்லை.ரஷ்யாவில் அனுமதித்து விட்டார்கள்.ரஷ்யாவில் நுழைந்தவுடன் என் அண்ணனுக்கு வந்து சேர்ந்து விட்டதாக குறுஞ்செய்தி அனுப்பிவிட்டேன். பயணத்தின் போது எங்கு இருக்கிறேன் என்ன செய்கிறேன் என்று அவனுக்கு அவ்வப்போது செய்தி அனுப்பிவிடுவேன்.நான் பயணம் போவதை பெரும்பாலும் வீட்டில் யாருக்கும் சொல்வதில்லை.வீணாக கவலைப்படுவார்கள் அல்லது வீணாய் போய்ட்டானே என்று கவலைப்படுவார்கள் . என் அண்ணனுக்கு மட்டும் தான் தெரியும்.ரஷ்யாவுக்கு வந்ததும் அவனுக்கு மட்டும் தான் தெரியும்.

ரஷ்யாவுக்கு போக ஆசை இருந்தாலும்,என் வாழ்நாளில் நானெல்லாம்  போவேன் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை.ஆனால் இதோ இப்போது ரஷ்யாவுக்குள் நின்றுகொண்டிருக்கிறேன்.

(மேலும்  பயணிப்போம் ..)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s