வெண்ணிற இரவுகள்: ரஷ்யப்பயணம்-2

அங்கு நின்று கொண்டிருந்த இளவயது ரஷ்யர் என்னிடம் நல்ல ஆங்கிலத்தில் “Are you looking for something?” என்று கேட்டார்.”ஆம் .Fasol Hostel” என்று கையில் வைத்திருந்த விலாசத்தை காண்பித்தேன்.அதை தனது மொபைலில் கூகுள் மேப்பில் தேடி விட்டு “ஆம் இங்கு தான் இருக்கிறது” என்று கேள்வி பாவத்துடன் சொல்லிவிட்டு அவரும் முன்னும் பின்னும் சென்று எனக்காக  தேடிக் கொண்டிருந்தார். “இந்தியன்?” என்று கேட்டார்.”ஆம்” என்றேன். இறுதியில் ஹாஸ்டெலை கண்டுபிடித்துவிட்டார்.

ஹாஸ்டல் அங்கு இருந்த ஒரு கட்டிடத்தின் உட்புறம் பின்னால் இருந்தது.அவருக்கு நன்றி சொல்லி விட்டு ஹாஸ்டலுக்கு சென்றேன். ஹாஸ்டெல் வரவேற்பறையில் உட்கார்ந்திருந்த இளைஞன் ஓரளவு ஆங்கிலம் பேசினான்.நான்கு படுக்கை இருந்த அறையில் ஒரு படுக்கை முன்பதிவு செய்திருந்தேன்.நான்கு நாட்கள்.மொத்தம் 4200ரூபிள்ஸ்.சிறிய அறை. சுத்தமாகவே இருந்தது.இரண்டு bunk beds.அதில் ஒன்றில் மேற்படுக்கை எனக்கு.பணம் செலுத்திவிட்டு எனது விசாவை ரெஜிஸ்டர் செய்து தருமாறு வரவேற்பறையில் இருந்தவனை கேட்டுக் கொண்டேன்.அவனும் சரி என்று தலை ஆட்டி விட்டு பாஸ்ப்போர்ட்டை ஸ்கேன் செய்து வைத்துக் கொண்டான்.

பொதுவாக ஐரோப்பிய நாடுகளை போலவே ரஷ்யாவிலும், வெளிநாட்டவர்கள், தான் நாட்டுக்குள் நுழைந்த நாளில் இருந்து ஏழாவது வேலை நாளுக்குள் தனது விசாவை ரெஜிஸ்டர் செய்யவேண்டும்.பொதுவாக தங்கும் விடுதிகளிலேயே இதை செய்து தருவார்கள்.சிறிது பணம் வாங்கி கொண்டோ, இலவசமாகவோ . எனது விடுதியில் இலவசமாக செய்து தருவதாகவே சொல்லி இருந்தார்கள்.இந்த சட்டம் யாருக்கும் தெளிவாக இல்லாமல் குழப்பமாகவே இருக்கிறது. அதனாலேயே பெரும்பாலும் யாரும் கண்டுகொள்வதில்லை. சட்டப்படி எந்த நகரத்தில் ஏழு நாட்களுக்கு மேல் தங்குகிறோமோ அந்த நகரத்தின் தபால் நிலையத்தில் தமது விசாவை ரெஜிஸ்டர் செய்ய வேண்டும்.இப்போது நானோ மாஸ்கோவில் நான்கு நாட்கள் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ஐந்து நாட்கள் தங்குகிறேன்.நான் ரெஜிஸ்டர் செய்ய வேண்டுமா அப்படி செய்வதென்றால் எந்த நகரத்தில் செய்ய வேண்டும் அல்லது இரண்டிலும் செய்ய வேண்டுமா என்று தெரியவில்லை.இது போதாதென்று மாஸ்கோவில் இருபது நாட்களுக்கு முன்பு தான் கால்பந்து போட்டிகள் நடைபெற்று முடிந்திருந்தது.அதை பார்க்க பல வெளிநாட்டவர்கள் வந்திருந்திருப்பார்கள். அவர்கள் வந்த இருபத்தி நான்கு மணிநேரத்தில் விசாவை ரெஜிஸ்டர் செய்ய வேண்டும் என்று தற்காலிகமாக சட்டம் போட்டிருந்தார்கள். இப்போது எது நடைமுறையில் இருக்கிறது என்று தெரியவில்லை. பொதுவாக வெளியே நடமாடும் போது ஏதேனும் போலீஸ் அதிகாரி சோதனை செய்வார்.ரெஜிஸ்டர் செய்திருக்கவில்லை என்றால் அதிக பட்சமாக 2000ரூபிள்ஸ் அபராதமோ இரண்டு தடவைக்கு மேல் மாட்டினால் உடனடியாக ரஷ்யாவை விட்டு வெளியேற்ற படவோ செய்யலாம்.அப்படி இல்லையெனில் போலீஸ்காரருக்கு கப்பம் கட்ட வேண்டியது இருக்கும்.எவ்வளவு கேட்பார்கள் என்று தெரியாது.யாரிடமோ இருநூறு டாலர்கள் வாங்கி இருக்கிறார்கள் என்று இணையத்தில் பயமுறுத்தி இருந்தார்கள்.(சட்டப்படி அபராதமே 34டாலர் தான்)அன்று சனிக்கிழமை.அலுவலகங்கள் விடுமுறை.அதனால் திங்கள் கிழமை ரெஜிஸ்டர் செய்து தருவதாக கூறினான்.

IMG_20170716_205238_HDR

அப்போது மணி மதியம் ஒன்று.நான் டெல்லியில் இருந்து மாஸ்கோ வந்த விமானத்தில் எனக்கு நடுவில் நான்கு வரிசையான இருக்கைகளில் ஒன்றை தந்திருந்தனர்.மற்ற மூன்று இருக்கையும் காலியாகவே இருந்தது. எனவே விமானம் கிளம்பி ஒரு மணி நேரம் கழித்து நான்கு இருக்கைகளில் கால் நீட்டி படுத்து தூங்கிவிட்டேன்.எப்படியும் நான்கு மணி நேரம் தூங்கி இருப்பேன். இருந்தாலும் இன்னும் களைப்பாக இருந்தது.காலை சாப்பிடவும் இல்லை.முதல் நாள் இரவும் சரியாக சாப்பிடவில்லை.கூகிள் மேப்பில் அருகே எங்கேனும் இந்தியன் உணவகம் இருக்கிறதா என்று தேடினேன்.ஹாஸ்டெலில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் ஒன்று இருந்தது.கிளம்பி சென்றேன்.அங்கு உணவு காலியாகி இருந்தது.மணி இரண்டரைதான்.இந்தியாவில் இருந்து ரஷ்யாவுக்கு டூர் வந்திருந்த ஒரு வடஇந்திய கும்பல் காலியாக்கி விட்டிருந்தது.பொதுவாக இது போன்ற இந்திய உணவகங்கள் இந்த டூர் கும்பல்களை நம்பித்தான் இருக்கிறது போலும்.அதனால் விலைகள் எல்லாம் மிக அதிகம்.சரி வேறு ஏதேனும் உணவகம் அகப்படுகிறதா என்று தேடினேன்.

முதல் பிரச்சனை எது உணவகம் என்று கண்டுபிடிப்பது.பெரும்பாலும் ரஷ்யா குளிரான பனிபொழிகிற நாடு.அதனால் எல்லா கடைகளும் கருப்பு கண்ணாடி தடுப்புகளின் உள்ளே இருந்தது.அதனால் என்ன கடை என்பது தெரியாது.வெளியிலும் ரஷ்ய மொழியிலேயே எழுதி இருந்தது.தெரியும் படியான கடைகளில் சென்று சாப்பிட கொஞ்சம் கூச்சம், பயம்.சுற்றி தேடி இறுதியில் மெக் டி உணவகத்தை கண்டேன்.உள்ளே சென்று பார்த்தால் அங்கும் ரஷ்யன் மொழிதான்.கூட்டம் வேறு நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.வேறு எங்காவது தேடிப் பார்ப்போம் என்று வெளியே சென்று ஒரு அரைமணி நேரம் பார்த்துவிட்டு வேறு ஏதும் திருப்தி இல்லாததால் மீண்டும் மெக் டிக்கே வந்து சேர்ந்தேன்.என்ன ஆனாலும் பரவாயில்லை என்று வரிசையில் போய் நின்றுவிட்டேன்.அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த சிறுவன் நேரடியாகவே என்னிடம் வந்து என்ன வேண்டும் என்று உடைந்த ஆங்கிலத்தில் கேட்டு எழுதி ஒரு சீட்டை கையில் கொடுத்து கௌண்ட்டரை நோக்கி கைகாட்டினான்.அங்கு போய் சீட்டை நீட்டி கணினியில் தெரிந்த பணத்தை கொடுத்து வாங்கிக்கொண்டேன்.ஒரு பர்கர், ஒரு காபி.ரெசிப்ட் தந்தார்கள்.ரஷ்யனில்தான்.அதை பத்திரப்படுத்திக் கொண்டேன். பின்னால் உதவும்.

சாப்பிட்டுவிட்டு அறைக்கு சென்று குளித்துவிட்டு தூங்கி விட்டேன்.பொது கழிவறை,குளியலறை தான். தரை தளத்தில் இருந்த அனைவருக்கும் மூன்று கழிவறை,மூன்று குளியலறை.ஆண் ,பெண் இருவருமே அதை தான் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.மிக சுத்தமாகவே இருந்தது.ஹாஸ்டெலில் சமையலறையும், பாத்திரங்களும் இருந்தது .தேவைப்பட்டால் பொருட்கள் வாங்கி வந்து நாமே சமைத்தும் கொள்ளலாம்.இரவு எட்டரை மணிக்குத்தான் எழுந்தேன்.ஆனால் இன்னும் சூரியன் மறையவில்லை.ரஷ்யாவில் கோடைகாலத்தில் மொத்தமே ஐந்து மணி நேரம் தான் இரவு.வெண்ணிற இரவுகள். இரவு உணவு வாங்க வேண்டும்.கிளம்பி மீண்டும் மெக் டிக்கு சென்றேன். மாலையில் வாங்கிய ரெசிப்ட்டில் எழுதி இருந்ததை காட்டி ஒரு பர்கர் பார்சல் வாங்கிக்கொண்டேன்.பின் சில நேரங்கள் அந்த இடத்தை சுற்றி உலாவிக் கொண்டிருந்தேன்.வழியில் ஒருவர் நிறுத்தி சிகரெட் இருக்கிறதா என்று கேட்டார்.இல்லை என்று சொல்லி நடந்துவிட்டேன்.உண்மையில் இல்லை. பின்னால் வருபவர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.யாரேனும் யாரையேனும் நிறுத்தி சிகரெட் வாங்கிக் கொள்கிறார்கள். அவர்களும் கொடுத்துவிடுகிறார்கள். பின் இந்திய உணவகத்திற்கு அருகில் இருந்த ஒரு சூப்பர் மார்க்கெட் சென்று இரண்டு பீரும் சிகெரெட் பாக்கெட்டும் வாங்கிக்கொண்டு ஹாஸ்டெளுக்கு வந்து விட்டேன்.ஹாஸ்டெலுக்கு வெளியே தெருவில் நாற்காலிகள் போட்டு வைத்திருந்தார்கள். புகைப்பதற்கு.அங்கு உட்கார்ந்து இரண்டு பீரையும் குடித்து விட்டு பர்கரையும் சாப்பிட்டுவிட்டு அறைக்கு சென்று விட்டேன்.சூரியன் மறைய ஒன்பதரைக்கும் மேல் ஆனது.அறையில் தங்கியிருந்த மற்றவர்களில் இருவர் ரஷ்யர்கள், இன்னொருவன் ரஷியன் இல்லை.ஆனால் வெள்ளைக்காரன். அவர்களுக்கு ஹாய் சொல்லிவிட்டு தூங்கப்போய்விட்டேன்.

(மேலும்  பயணிப்போம் ..)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s