வெண்ணிற இரவுகள்: ரஷ்யப்பயணம் -3

காலை எழுந்ததே எட்டரை மணிக்குத்தான்.அறையில் வேறு யாரும் இல்லை. வெளியே கிளம்பி சென்றிருந்தார்கள்.ஹாஸ்டெலிலேயே காலை உணவுக்கு ஆர்டர் செய்திருந்தேன்.ஓட்ஸ் கஞ்சியும்,பிரெட்டும், ஜூசும் வைத்திருந்தார்கள். குளித்து சாப்பிட்டுவிட்டு கிளம்பி விட்டேன்.கிரெம்லின் மற்றும் செஞ்சதுக்கத்தை(Red Square) பார்ப்பதுதான் திட்டம்.மெட்ரோ ரயிலில் ஐந்து நிமிடத்தில் போய் சேர்ந்து விட்டேன்.

மெட்ரோ ஸ்டேஷனுக்குள் நுழைந்தவுடன் எனது பையை சோதனை செய்தார்கள்.2010இல் இரு மாஸ்கோ மெட்ரோ ஸ்டேஷனில் குண்டு வெடித்து 40பேர் இருந்திருக்கிறார்கள் 100பேர் காயம்பட்டிருக்கிறார்கள். இந்த வருடம் 2017 மார்ச்சில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகர் மெட்ரோவில் குண்டு வெடித்து 20பேர் இறந்திருக்கிறார்கள். ரஷ்ய கூட்டமைப்பின் கீழ் மொத்தம் 22 குடியரசுகள் உள்ளன.இந்த குடியரசுகள் தமக்கு தேவையான அரசியலமைப்பு சட்டத்தை தானே இயற்றிக் கொள்ளலாம். தமது ஆட்சிமொழியை தாமே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ரஷ்ய தலைவரால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் இக்குடியரசுகளை நேரடியாக கண்காணிப்பார்கள். அதில் ஒன்று செச்சினியா.இங்கு வாழும் மக்களில் பெரும்பான்மை சுன்னி முஸ்லீம் இனத்தை சேர்ந்தவர்கள்.ரஷ்ய இனத்தை சேர்ந்தவர்கள் மிகக் சிறுபான்மையினர் .1991இல் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு செச்சினியா தன்னை தனி நாடாக அறிவித்தது.ரஷ்யா செச்சினியாவுக்கு இடையே இரண்டு போர்களுக்குப் பின் 1999இல் ரஷ்யா மீண்டும் செச்சினியாவை கைப்பற்றியது.இந்த செச்சினியாவைச் சேர்ந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகளே குண்டுவெடிப்புகளுக்கு காரணமாகக் கூறுகிறார்கள். பெய்ஜிங் மெட்ரோவில் நுழையும் போதே எல்லோரது பையையும் ஏர்போர்ட் போல டிடெக்டர் வைத்து சோதனை செய்து தான் அனுப்புவார்கள்.ஆனால் இங்கு random ஆகத்தான் கூப்பிட்டு சோதனை செய்கிறார்கள்.

DSCN1788

மெட்ரோவை விட்டு வெளியே வந்ததும் தஸ்தயெவ்ஸ்கி சிலையை பார்க்கமுடிந்தது. ஒரு கம்பீரமான கட்டிடத்தின் முன்னே சோகமாக சாலையை பார்த்தவாறு அமர்ந்திருந்தார்.அந்த கட்டிடம் ஒரு நூலகம்.கட்டிடத்தை பார்க்கும் போதே நூலகத்திற்குள் செல்ல ஆசையாக இருந்தது.ஆனால் கிரெம்லின் செல்ல வேண்டும்.சாலையை கடந்து கிரெம்லின் நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.மக்கள் சாலை விதிமுறைகளை ஒழுங்காக கடைபிடிக்கிறார்கள். நடந்து செல்பவர்களுக்காக காரை நிறுத்தி கடந்த பின்பே செல்கிறார்கள்.

க்ரெம்லினில் நுழைய அனுமதி சீட்டு கொடுக்கும் இடத்தில மிகப்பெரும் வரிசையை காண முடிந்தது.அது ஒரு பூங்கா .போய் நானும் நின்று கொண்டேன். இது கோடைகாலம்.நேற்று ஓரளவு வெயில் இருந்தது. ஆனால் இன்று நல்ல குளிர்.  கூட்டம் நீண்டு அனுமதி சீட்டு கொடுக்கும் கட்டிடத்திற்குள் சென்றது.இது க்ரெம்ளினுக்கு செல்ல நிற்கும் கூட்டமா,இல்லை Armour chamber செல்ல நிற்கிறார்களா அல்லது எல்லாவற்றுக்கும் இங்கு அனுமதி சீட்டு கொடுக்கிறார்களா என்று தெரியவில்லை.சிறிது நேரம் நின்று பார்த்தேன். கூட்டம் நகரவில்லை.மக்கள் கூட்டமாக எதிர்புறத்தில் இருந்து நாங்கள் நிற்கும் திசை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.சரி அங்கு என்னவோ இருக்கிறது எதற்கும் சென்று பார்த்துவிட்டு வருவோம் என்று அந்த திசையை நோக்கி நடந்தேன்.பூங்கா முடிவில்(உண்மையில் அதுதான் பூங்கா நுழைவு) இறந்து போன வீரர்களின் நினைவாக அணையாமல் எரியும் நெருப்புக்கு இரு ராணுவ வீரர்கள் காவல் இருந்தனர்.அதை கடந்து பூங்காவுக்கு வெளியே வந்தால் அங்கு மிக நீண்ட கூட்டம் வரிசையாக நின்று கொண்டிருந்தது. அங்கிருந்து பார்த்தாலே புனித பசில் தேவாலயத்தின் மேற்பகுதி தெரிந்தது. அதை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அங்கு தான் செஞ்சதுக்கம் இருந்தது.

செஞ்சதுக்கம் என்பது மிகப்பெரும் மைதானம். இந்த மைதானத்தை சுற்றித்தான் புனித பசில் தேவாலயம்,கிரெம்லின்,ஸ்டேட் மியூசியம்,லெனினின் சமாதி ஆகியவை உள்ளன. சமாதி என்றாலும் இங்கு லெனினின் உடல் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. 13ஆம் நூற்றாண்டிலிருந்து ரஸ்சியாவின் வரலாற்றில் முக்கிய அம்சமாக இருப்பதனால் 1990இல் இச்சதுக்கமும்,க்ரெம்லினும் யுனெஸ்கோவினால் உலக பாரம்பரியமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செஞ்சதுக்கத்தில் பல பேரணிகளும்,பொது விழாக்களும், நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.நான் சென்ற போதே ஏதோ நிகழ்வுக்காக மேடை அமைத்துக் கொண்டிருந்தார்கள்.அந்த வரிசையாக நின்று கொண்டிருந்த கூட்டம் லெனின் உடலை பார்ப்பதற்காக நின்றுகொண்டிருந்தார்கள். காலை 10 மணியிலிருந்து மதியம் 1மணிவரை தான் அனுமதி. எனக்கு அப்போது அந்த வரிசை எதற்கு என்று தெரியவில்லை.நான் நேராக புனித பசில் தேவாலயம் நோக்கி சென்று விட்டேன்.

DSCN1803

சினிமாக்களிலும்,புகைப்படங்களிலும் புனித பசில் தேவாலயத்தை பார்க்கும் போது அது ஏதோ குழந்தைகளுக்கான தீம் பார்க் என்று தான் முன்பு நினைத்திருந்தேன். அதன் வெங்காய வடிவ கூரையும் பல நிறங்களும் அவ்வாறுதான் தோன்றின.டிஸ்னிலேண்ட்டின் முகப்பை ஓத்தே இருப்பதால் இருக்கலாம். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டம் அதிகம். அனுமதிசீட்டு பெற்றுக்கொண்டு உள்ளே சென்று பார்த்தேன்.பழமையான கட்டிடம்.கிறிஸ்துவத்திற்கு சம்பந்தமான பல ஓவியங்கள் உள்ளே வரையப்பட்டிருந்தன. கிபி 1555 முதல் 1561வரை இவான் எனும் ஜார் மன்னரால் கட்டப்பட்டது இந்த தேவாலயம்.ரஷ்யாவில் கம்யூனிச ஆட்சி வந்த பிறகு இங்கு பூசைகள் நிறுத்தப்பட்டு இப்போது மியூசியமாக செயல்பட்டு வருகிறது. புனித பசில் தேவாலயத்தை பார்த்துமுடித்தவுடன் அதன் அருகிலேயே இருந்த GUM ஷாப்பிங் மால்  பார்க்க சென்றேன்.1890களில் கட்டப்பட்டது இந்தக் கட்டிடம். உள்ளே பல வகையான கடைகள் இருந்தன.நமக்கு இவை எல்லாம் பார்ப்பதற்கு மட்டும் தான்.விலை மிக அதிகம்.அங்கிருந்த பணம் எடுக்கும் இயந்திரத்தில் சிறிது பணம் எடுத்துக் கொண்டேன்.பின் நேராக பூங்காவை தாண்டி மீண்டும் கிரெம்லின் உள்ளே செல்ல அனுமதிச்சீட்டு வாங்கும் இடத்திற்கு வந்தேன். இன்னும் நீண்ட வரிசை நின்று கொண்டிருந்தது.அந்த கட்டிடத்திற்குள் சென்று பார்த்தேன்.அந்த நீண்ட வரிசை நின்றுகொண்டிருந்தது Armoury chamber என்னும் போர்க்கருவிகள் மியூசியம் பார்ப்பதற்கு.அங்கு ஒரு நாளுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே மக்களை அனுமதிக்கிறார்கள்.ஆனால் க்ரெம்லினுக்கு அனுமதிச்சீட்டு கொடுக்கும் இடத்தில் கூட்டம் குறைவாகவே இருந்தது.அங்கு சென்று அனுமதிச்சீட்டு வாங்கி கிரெம்லின் நோக்கி சென்றேன். நல்ல கூட்டம். நிறைய சீனர்களை காண முடிந்தது.

பொதுவாக  சினிமாவில் ருஷ்யர்கள் என்றால் நல்ல உயரத்துடன் வாட்ட சாட்டமாக நீலக் கண்களுடன் காண்பிப்பார்கள்.ஆனால் உண்மையில் எல்லா வகையான மனிதர்களும் கலந்தே இருக்கின்றனர்.நம்மால் வெள்ளையர்களை பொதுவாக இவர் ரஸ்சியர் இவர் வேற்றவர் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.ஒரு வேளை அவர்களால் கண்டுபிடிக்க முடியும்.ஆனால் பெரும்பாலும் ரஸ்சியர்கள் நீலக்கண்களுடன் இருக்கிறார்கள்.கிரெம்லின் சுற்றி செங்கோட்டையால் சூழப்பட்டுள்ளது.ஆனால் Red Square என்னும் பெயர் இதனால் வந்தது அல்ல.புனித பசில் தேவாலயத்தின் அருகில் இருந்த ஒரு சிறு பகுதி முன்பு ரஷ்ய மொழியில் “அழகு” மற்றும் “சிவப்பு” என்று பொருள் தரும் வண்ணம் “க்ராஸ்னயா” என்று அழைக்கப்பட்டது.பின்னாளில் இதுவே செஞ்சதுக்கம் என்று அழைக்கப்படலானது.

இந்த கிரெம்லின் மாஸ்கோவ் நதிக்கரையில் அமைந்துள்ளது.இதனுள் ஜார் மன்னர்கள் வசித்த  நான்கு அரண்மனைகளும் நான்கு தேவாலயங்களும் உள்ளன.இதன் உள்ளே “Grand Kremlin Palace” எனும் ரஸ்சியாவின் அதிபர் மாளிகை உள்ளது. எப்படி வெள்ளை மாளிகை என்பது அமெரிக்கா அரசினை குறிக்க பயன்படுகிறதோ அதேபோல் கிரெம்லின் ரஷ்ய அரசினை குறிக்க பயன்படுகிறது.உள்ளே எந்த அரண்மனைக்குள்ளும் செல்ல அனுமதி இல்லை. ஒரு அரண்மனையின் ஒரு பகுதி “Armoury chamber” மியூசியம் ஆக உள்ளது.ஆனால் அதனுள் செல்ல நான் அனுமதிச்சீட்டு வாங்கவில்லை.மறுநாள் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். உள்ளே இருந்த தேவாலயங்களை மட்டும் தான் பார்த்தேன். அவைகளும் இப்போது மியூசியம் ஆகத்தான் உள்ளது.எல்லா தேவாலய சுவர்களிலும் பைபிள் சார்ந்த ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. இவற்றையெல்லாம் சுற்றிப்பார்த்து விட்டு வரவே நான்கரை ஆகிவிட்டிருந்தது.மதியம் சாப்பிடவில்லை.ஒரு காபி மட்டும் குடித்திருந்தேன். அங்கு அருகில் இருந்த நெடுஞ்சாலையில் சிறிது நேரம் அலைந்துவிட்டு பின் மெட்ரோ பிடித்து ஹாஸ்டெளுக்கு சென்று விட்டேன்.குளித்துவிட்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு சுற்றி தெருக்களில் சுற்றிக்கொண்டிருந்தேன் .எனது ஹாஸ்டல் இருந்த ஏரியா ஆள் அரவமற்றே இருந்தது.ஆனால் இருட்டுவதற்கு நேரம் ஆவதால் அவ்வளவு பயம் இல்லை.சுற்றிவிட்டு சூப்பர் மார்க்கெட் சென்று இரண்டு பீர், இந்திய உணவகத்தில் ஒரு பிரியாணி பார்சல் வாங்கிக் கொண்டு முந்திய நாள் போல் ஹாஸ்டல் வெளியே உட்கார்ந்து பீரையும், பிரியாணியையும் காலி செய்து விட்டு தூங்கப்போய்விட்டேன்.

(மேலும்  பயணிப்போம் ..)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s