வெண்ணிற இரவுகள்: ரஷ்யப்பயணம்-5

மறுநாள் லெனின் உடலைப் பார்க்க மீண்டும் செஞ்சதுக்கம் செல்ல வேண்டும். சரியாக திட்டமிடாததால் மீண்டும் மீண்டும் செஞ்சதுக்கம். ஆனால் செஞ்சதுக்கத்தில் இருப்பது ஏனோ மிகவும் சந்தோஷமாகவே இருந்தது.

பொதுவாக பயணம் சென்று வந்த பிறகு எல்லோரும் கேட்பார்கள் அங்கு என்ன இருக்கிறது என்ன பேமஸ் என்று. நான் பொதுவாக அங்கு இருக்கும் சுற்றுலா தளங்களை பற்றி சொல்வேன். ஆனால் உண்மையில் எனக்கு வெளி இடங்களில், வேறு பண்பாடு உடைய இடங்களில்  முக்கியமாக வெளிநாடுகளில் வெறுமனையாக இருப்பதே சந்தோஷம்தான். இருந்தாலும் சுற்றுலா தளத்தை தேர்ந்தெடுப்பது அங்கு செல்லும் வழிகளில் உள்ள இடங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டே செல்லலாம் அதனால் தான். வேடிக்கை பார்க்கும் போது கூட நுண்அவதானிப்பு எல்லாம் இல்லை. சும்மா பராக்கு பார்ப்பது தான். அதனாலேயே பொது போக்குவரத்தை தான் தேர்வு செய்வேன். முக்கியமாக மெட்ரோ.

வழக்கம் போல் காலை உணவை மக் டியில் முடித்து கொண்டு செஞ்சதுக்கம் சென்றேன். லெனின் சமாதிக்கு வெளியே மிகப் பெரிய வரிசை நின்று கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக ஆட்களை உள்ளே அனுமதித்துக் கொண்டிருந்தார்கள். என் முறை வர ஒரு மணிநேரம் காத்திருக்க வேண்டியதிருந்தது. உள்ளே லெனின் உடலை பதப்படுத்தி வைத்திருந்தார்கள்.இருட்டு அறையில் இரு வீரர்களின் காவலோடு அவர் முகத்தில் ஒளி படுமாறு உடலை கண்ணாடி பெட்டிக்குள் படுக்க வைத்திருந்தார்கள். நன்கு சிவந்த நடுத்தர உயரம் கொண்டவர் போல் தெரிந்தார். லெனின் சோவியத் யூனியனின் முதல் கம்யூனிச தலைவர்.ஜார் ஆட்சிக்கு எதிரான புரட்சிக்கு தலைமை வகித்தவர். 1917 இல் ஜார் மன்னரின் வீழ்ச்சிக்கு பிறகு சோவியத் யூனியனின் தலைவராக பொறுப்பேற்று 1924இல் இறக்கும் வரை அதன் தலைவராக இருந்தவர். அவர் உடலைப் பார்த்துவிட்டு வெளியே வந்தேன். அடுத்து Arbat தெருவுக்கு செல்வதாக திட்டம்.

Arbat தெரு என்பது நினைவுப் பொருட்கள் வாங்குவதற்கான கடைகள் இருக்கும் தெரு. ஆனால் எனக்கு அங்கு வாங்க எந்த எண்ணம் இல்லை. சும்மா சென்று பார்த்து விடலாம் என்று நினைத்தேன். எனக்கு ரஷ்யாவின் புகழ் பெற்ற Matryoshka பொம்மை வாங்க ஆசை. இருந்தாலும் மறுநாள் Izmailovsky மார்க்கெட் செல்ல எண்ணம் இருந்தது.அங்கு குறைந்த விலையில் கிடைக்கும் என்று சொல்லி இருந்தனர்.அதனால் அங்கு வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தேன்.

IMG_20170718_131645_HDR

Matryoshka பொம்மை என்பது ஒன்றுக்குள் ஒன்றாக அடுக்கப்பட்ட ஒரே மாதிரியான பொம்மைகள். வெளியே இருக்கும் ஒரு பொம்மையை இரண்டாக திறக்க உள்ளே இன்னொரு பொம்மை இருக்கும்.அதை இரண்டாக திறக்க உள்ளே இன்னொன்று.இப்படியே மூன்று, ஐந்து, பத்து வரை கிடைக்கும். பெரும்பாலும் பொம்மையின் வெளியே ரஷ்ய விவசாயப் பெண்ணின் படமோ அல்லது தேவதை கதைகளில் வரும் ஏதேனும் கதாபாத்திரத்தின் படமோ இருக்கும்.மேலும் பல ரஷ்யத்தலைவர்களின் படங்களும் இருக்கின்றன.முக்கியமாக இப்போதைய அதிபர் விளாடிமிர் புடின் படம். Arbat தெரு செஞ்சதுக்கத்தில் இருந்தது ஒரு கிலோ மீட்டர் தொலைவில் தான் இருந்தது.அதை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

இன்று திங்கட்கிழமை, வேலை நாளாக இருந்தாலும் ரோட்டோர பெஞ்சுகளிலும், சிறிய பூங்காக்களிலும் மக்கள் சாவகாசமாக உட்கார்ந்து பேசிக்கொண்டோ சிகரெட் பிடித்து கொண்டோ இருந்தனர். (வெயிலை குடித்துக்கொண்டிருந்தார்கள்). பெரும்பாலும் குளிரிலும் பனியிலும் இருப்பவர்களுக்கு இந்த வெயில் காலம் அவர்களுக்கு மிகவும் கொண்டாட்டமான காலமாக உள்ளது போலும். எனக்குத் தெரிந்து இந்தியாவில் தான் புகை பிடிப்பவர்களையும் மது அருந்தபவர்களையும் ஒழுக்கக் கேடானவர்கள் என்று முத்திரை குத்த பழகி விட்டார்கள்.வெளிநாடுகளில் புகையும், மதுவும் ஒரு பழக்கம் மட்டுமே.அடுத்தவருக்கு இடைஞ்சல் இல்லாமல் பொது இடங்களில் புகை பிடிக்கலாம்.நானும் நேரம் கிடைக்கும் போது அங்கங்கு நின்று புகைபிடித்துக் கொண்டிருந்தேன். பொதுவாக இந்தியாவில் பொது இடங்களில் சிகரெட் பிடிக்கக் கூடாது என்ற சட்டம் அவ்வளவாக கண்டுகொள்ள வில்லை எனினும் இங்கு சிகரெட் பிடிக்கும் போது கொஞ்சம் எச்சரிக்கையுடன் தான் பிடிக்க முடியும். இதில் சுற்றியுள்ளவர்களில் “அயோக்கியப்பயல்” என்ற மாதிரியான பார்வை வேறு. ஆனால் வெளிநாடுகளில் புகை பிடிக்கும்போது புகைப்பதில் உள்ள சுதந்திரத்தை உணர முடிகிறது.

Arbat தெருவில் பல நினைவுப் பொருட்கள் விற்றுக்கொண்டிருந்தார்கள். ஓவியங்கள் வரைந்து விற்றுக்கொண்டிருந்தார்கள். நம்மையும் வரைந்து தருகிறார்கள். சிறிது நேரம் சுற்றிப்பார்த்துக் கொண்டிருந்தேன். பின் மெட்ரோ ரயில் பிடித்து ஹாஸ்டெலுக்கு சென்றேன்.மணி மதியம் 4தான் ஆகியிருந்தது. குளித்து கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்து விட்டு கார்க்கி பூங்கா செல்லலாம் என்று கிளம்பி சென்றேன்.

IMG_20170718_182927_HDR

மெட்ரோ ஸ்டேஷனில் இறங்கி பாலத்தை கடந்தால் பாலத்தின் முடிவில் அமைந்திருந்தது கார்க்கி பூங்கா.மாஸ்கோவ் நதியின் கரையில் முன்னூறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பூங்கா ருஷ்ய எழுத்தாளர் மாக்ஸிம் கார்க்கியின் பெயரால் அழைக்கப்படுகிறது.இவரின் “தாய்” நாவல் மிகவும் பிரபலமானது.நான் படித்த முதல் ரஷ்ய நாவல்.  உண்மையில் பூங்காக்கள் செல்ல எனக்கு விருப்பமே இருப்பதில்லை. ஆனாலும் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்களில் இதையும் குறித்து வைத்திருந்தேன். அதற்கு காரணம் அதன் உள்ளே “Garage museum of contemporary art” மியூசியம் இருந்தது.ஆனால் கார்க்கி பூங்கா நான் எதிர்பார்த்ததற்கு மாறாக உயிரோட்டமாக இருந்தது.

இந்தியாவில் பூங்காக்கள் பொதுவாக காதலர்களின் லீலைகளுக்காகவும், சர்க்கரை வியாதிக்கார அங்கிள்களின் ஓட்டத்திற்காகவும் தான் உள்ளது. கார்க்கி பூங்காவில் குடும்பங்கள் குழந்தைகளுடன் நடையும் , இளைஞர்களும்  இளம் பெண்களும் காலில் சக்கரத்தை மாட்டிக்கொண்டு ஸ்கேட்டிங் பழகிக்கொண்டும், சுற்றிக்கொண்டும் இருந்தார்கள். இன்னொரு இடத்தில் மணல் பரப்பி வாலி பால் விளையாடிக்கொண்டிருந்தார்கள். இன்னொரு இடத்தில் பாக்ஸிங் பேக் வைத்துக்கொண்டு குத்திப் பழகிக்கொண்டிருந்தார்கள். இன்னொரு இடத்தில் சத்தமாக இசை வைத்து உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தார்கள்.சிலர் மாஸ்கோவ் நதியின் கரை படிகளில் உட்கார்ந்து நதியில் படகுகள் போவதை பார்த்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தனர்.பெரும்பாலும் எல்லோரும் ஸ்கேட்டிங் தான் போய்க்கொண்டிருந்தனர். பூங்காவில் மட்டும் அல்ல, எங்கேயும் எப்போதும் கையில் ஸ்கேட்டிங் பலகையை எடுத்து செல்கிறார்கள்.மெட்ரோ ஸ்டேஷனில் நுழையும் போது கையில் எடுத்து வைத்துக்கொள்வார்கள் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்ததும் அதன் மீது ஏறி சறுகி எங்கு வேண்டுமோ அங்கு செல்கிறார்கள். அங்கு சுற்றிக்கொண்டிருந்தேன். கடைசியில் கேரேஜ் மியூசியம் செல்ல மனம் இல்லாமல் விட்டுவிட்டேன்.

மீண்டும் பாலத்தை கடந்து மெட்ரோ சென்று சேர்ந்தேன்.அதன்பின் மீதமிருந்த மேலும் சில மெட்ரோ ஸ்டேஷன்களை பார்த்து விட முடிவு செய்தேன்.பொதுவாக மாஸ்கோவில் இந்தியர்களை நான் பார்க்கவில்லை.பார்த்த சிலரும் டூரிஸ்ட் ஆக வந்தவர்கள்.அப்புறம் ஹோட்டலில் வேலை செய்பவர்கள்.(அவர்களும் இந்தியாவில் இருந்து இங்கு வந்து மருத்துவம் படிப்பவர்களாக சுசிலா அவர்கள் சொல்லியிருந்தார்கள்) மற்றபடி வெளியில் சுற்றித்திரியும் போது யாரையும் பார்க்கவில்லை.ரஷ்யர்களின் பார்வையில் என்னை டூரிஸ்ட் என்று பார்ப்பது தெரிந்தது.

மேலும் சில மெட்ரோக்களை பார்த்து விட்டு ஹாஸ்டெலுக்கு சென்று விட்டேன். மறுநாள் மதியம் அறையை காலி செய்யவேண்டும்.  செயின்ட் பீட்டர்ஸ்பர்க் செல்கிறேன்.மாஸ்கோவில் கடைசி இரவு.இதை சாக்காக வைத்துக்கொண்டு இன்றும் பீரும் பிரியாணியும் சாப்பிட்டு விட்டு பையையும் தயார்செய்து வைத்துவிட்டு தூங்கப் போய்விட்டேன்.

பின்னூட்டமொன்றை இடுக