வெண்ணிற இரவுகள்: ரஷ்யப்பயணம்-6

இன்று Izmailovsky மார்க்கெட் செல்வதாக திட்டம். எப்படியும் மதியம் 12 மணிக்குத்தான் அறையை காலிசெய்ய வேண்டும். காலை 11 மணிக்கு தான் மார்க்கெட் திறக்கும். அதனால் ஒரு 10.30க்கு அங்கு இருந்தால் நன்றாக இருக்கும் என்று காலையிலே சீக்கிரமாக எழுந்து கிளம்பினேன. வரவேற்பறையில் இப்போது அந்த கோமட்டிப்பயல் உட்கார்ந்திருந்தான். அவனிடம் சென்று விசா ரெஜிஸ்டர் பற்றி விசாரித்தேன். அவனும் தேடித் பார்த்து விட்டு செய்யவில்லை என்றான். சரி இன்று செய்து தர முடியுமா? என்று கேட்டேன். எப்பொழுது அறையை காலி செய்கிறீர்கள்? என்று கேட்டான்.12 மணி என்றதும் வேண்டுமெனில் இன்று முயற்சி செய்து பார்க்கிறேன் ஆனால் கண்டிப்பாக 12மணிக்குள் முடியாது. வேண்டுமெனில் உங்கள் ஈமெயில் முகவரி தந்துவிட்டு செல்லுங்கள். ஸ்கேன் செய்து அனுப்பி வைக்கிறேன் என்றான். ஸ்கேன் பண்ணி அனுப்பி வைக்கிற மூஞ்சிய பாரு என்று மனதில் நினைத்துக்கொண்டேன். சரி போலீஸ் யாரும் கேட்டால் என்ன சொல்ல என்று கேட்டேன். கவலை வேண்டாம் யாரும் கேட்க மாட்டார்கள் என்றான். உனக்கு என்ன மாட்டுனா நான் தான தண்டம் கட்டணும்.

இனி இவனிடத்தில் பேசி எந்த ப்ரோயோஜனமும் இல்லை. என் ஈ மெயில் முகவரியை கொடுத்துவிட்டு அப்படியே எனது பேட்டரி பேக்அப்பையும் வரவேற்பறையில் சார்ஜ்க்கு போட்டுவிட்டு  மெட்ரோ ஸ்டேஷன் நோக்கி நடக்க ஆரம்பித்தேன். ஹாஸ்டெலில் இருந்த ப்ளக் பாயிண்ட் எல்லாம் வெளிப்புறமாக இல்லாமல் உட்புறமாக குழிக்குள் இருந்தது. எனது சார்ஜரை வைத்து போட ஏற்ற முடியவில்லை.அது உள்ளவே செல்ல வில்லை.எனவே நான்கு நாட்களும் வரவேற்பறையில் இருந்த மடிக்கணினியில் தான் சார்ஜ் ஏற்றிக்கொண்டிருந்தேன்.

இன்று கடைசி நாள் மாஸ்கோவில். மெட்ரோ பிடித்து மார்க்கெட் இருந்த ஸ்டேஷனை அடைந்தேன். வெளியே வந்து பார்த்தால் இடப்பக்கம் போகவா? வலப்பக்கம் போகவா? என்று தெரியவில்லை. மாஸ்கோ ஆப்லைன் மேப் உள்ள இரண்டு மொபைல் ஆப்(app) தரவிறக்கம் செய்து வைத்திருந்தேன். இரண்டும் சுத்த வேஸ்ட். நான்கு நாட்களும் சுத்தமாக வேலை செய்யவில்லை. கூகுள் மேப்பும் ஆப்லைன்னில் வேலை செய்யவில்லை. அந்த இடத்தை சுற்றிமுற்றி பார்த்தேன். அங்கு ஒரு போர்டில் Izmailovsky பூங்கா என்று இடப்பக்கம் அம்புக்குறி போட்டிருந்தார்கள். அந்தப்பக்கம் சென்று பார்த்தேன். பூங்கா ஒன்று இருந்தது. சிறிது தூரம் உள்ளே சென்று பார்த்தேன். மார்க்கெட்டுக்கான எந்த தடயமும் இல்லை. மீண்டும் திரும்பி வந்து மெட்ரோ ஸ்டேஷனில் இருந்து வலது பக்கம் சென்றுபார்த்தேன். சிறிது தூரத்திலேயே மார்க்கெட் கட்டிடம் தெரிந்தது. அதை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

நேரம் வேறு ஆகிக்கொண்டிருந்தது. 11 மணி. 1.30க்கு எனக்கு செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கு ரயில். ரயில் நிலையம் எனது மெட்ரோ ஸ்டேஷனில் இருந்து இரண்டாவது ஸ்டேஷன் தான். அதற்குள் எனது ஹாஸ்டெலுக்கு சென்று அறையை காலி செய்து அந்த ரயில் நிலையம் செல்ல வேண்டும். மார்கெட்டுக்குள் நுழைந்து நல்ல  Matryoshka பொம்மை ஏதேனும் கிடைக்கிறதா என்று பார்த்தேன். சில கடைகள் திறந்திருந்தன.பல கடைகள் அப்போதுதான் திறந்து கொண்டிருந்தார்கள். ஒரு பொம்மை அழகாக இருக்க எவ்வளவு என்று விசாரித்தேன். உள்ளுக்குள் ஒன்றாக மொத்தம் ஐந்து பொம்மைகள். 2500ரூபிள்ஸ். அரண்டு விட்டேன். நான் 500ரூபிள்ஸ் இருக்கும் என்று தான் நினைத்திருந்தேன். எனக்கோ பேரம் பேச தெரியாது. சரி வேறு கடைகளில் சென்று விசாரித்து பார்த்து விட்டு வரலாம் என்று இன்னொரு பெண்மணியிடம் அவள் கடையிலிருந்து ஒரு பொம்மையை விலை கேட்டேன். 5000 ரூபிள்ஸ். வேறு சில பொம்மைகளை காட்டி ஒவ்வொரு பொம்மைக்கும் ஒவ்வொரு விலை என்று சொன்னாள்.

IMG_20170719_110101_HDR

பொம்மையில் வரையப்பட்டிருந்த ஓவியத்தை பொறுத்து விலை வேறுபடுகிறது. குறைந்த விலையில் நல்ல ஓவியம் உள்ள பொம்மை ஏதாவது கிடைக்கிறதா என்று பார்த்தேன். 2000க்கு குறைவாக எதுவும் இல்லை. ஒரே ஒரு பொம்மை வாங்குவதாக உத்தேசம். இருந்தாலும் 2000ரூபிள்ஸ் உண்மையில் தகுதியானது தானா என்று தெரியவில்லை. வேறு ஒரு கடையில் இருந்த இன்னொரு பொம்மையை காட்டி அதன் விலை கேட்டேன். 10000ரூபிள்ஸ் என்றாள் கடைக்காரப்பெண்மணி. பொம்மை வாங்கும் ஆசையே போய்விட்டது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் போய் பார்த்துக்கொள்ளலாம் என்று வெளியே வந்துவிட்டேன்.

நேரம் வேறு ஆகிவிட்டிருந்தது. மெட்ரோ பிடித்து ஹாஸ்டல் வந்து சேர்ந்தேன். ரூமை காலி செய்து சாவியையும் கொடுத்துவிட்டு விசா ரெஜிஸ்டரையும் ஞாபகப்படுத்திவிட்டு சார்ஜ் போட வைத்திருந்த பேட்டரியையும்  எனது back packயும்  எடுத்து கொண்டு அவனுக்கு பை சொல்லிவிட்டு மெட்ரோ நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.பதினைந்து நிமிடத்தில் ரயில் நிலையம் அடைந்து விட்டேன். காலை சாப்பிடவில்லை. அங்கு இருந்த KFCயில் சுவர் விளம்பரத்தில் இருந்த படத்தைக் காட்டி பர்கர் பார்சல் வாங்கிக்கொண்டேன்.

அங்கு பல ரயில் நிலையங்கள் இருந்தன. புறநகர் செல்லும் ரயில் நிலையம், வேறு ஊர்களுக்கு செல்லும் ரயில் நிலையம் அப்புறம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் செல்லும் sapsan ரயில்களுக்கான ரயில் நிலையம். அங்கிருந்த ஒரு பெண் அதிகாரியிடம் எனது டிக்கெட்டை காட்டி எந்த ரயில் நிலையம் என்று கேட்டுக்கொண்டேன். அவள் காட்டிய திசையிலிருந்த ரயில் நிலையம் சென்றேன். சரியானது தான். எனக்கோ சிறிது பயம். யாரவது விசா ரெஜிஸ்டர் செய்ததை கேட்பார்களோ ?என்று.ஏனெனில் பொதுவாக இப்படி வேறு ஊருக்கு பயணம் செல்லும் போது தான் நிறுத்தி கேட்பார்கள் என்று இணையத்தில் போட்டிருந்தார்கள். ஆனால் யாரும் ஏதும் கேட்கவில்லை.  ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்த டிக்கெட்டை காண்பித்து ரயிலில் சென்று உட்கார்ந்து விட்டேன்.

ஜன்னல் இருக்கை பதிவு செய்திருந்தேன். வாங்கி வைத்திருந்த பர்கரையும் சாப்பிட்டு முடித்துவிட்டேன். 1.30க்கு சரியாக ரயில் கிளம்பிவிட்டது. மாஸ்கோவுக்கும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கும் இடைப்பட்ட தூரம் 650கிலோமீட்டர். ரயில் அதிகபட்சமாக 200கிலோமீட்டர் வேகத்தில் போய்க்கொண்டிருந்தது. வெளியே பச்சை பசேலென பண்ணைகளும், பண்ணைவீடுகளையும் பார்க்கமுடிந்தது. குளிர் காலத்தில் இவை எல்லாம் பனி மூடி இருக்கும்.குளிர் காலத்தில் கண்டிப்பாக மீண்டும் வரவேண்டும். அது ஏற்கனவே எடுத்திருந்த முடிவு தான். ட்ரான்ஸ்-சைபீரியன் ரயிலில் பனி காலத்தில் பயணம் செய்ய வேண்டும் என்பது எனது கனவு. எப்போது நேரம் அமையுமோ தெரியவில்லை.

வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தேன். இரண்டு மூன்று நிலையங்களில் வண்டி நின்று ஆட்களை ஏற்றியும் இறக்கியும் கொண்டிருந்தது. சிறிய நகரங்கள். ஏதேனும் நிலையத்தில் இறங்கி விடலாமா? என்று மனதில் நினைத்தேன். இறங்கி மொழி தெரியாமல் பிச்சை எடுத்து அலையவா?  அமைதியாக உட்கார்ந்து கொண்டேன். நான்கு மணி நேர பயணத்திற்கு பிறகு மாலை ஐந்தரை மணிக்கு செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் இறக்கிவிடப்பட்டேன். செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நல்ல குளிர். 15 டிகிரியை காட்டியது. குளிருக்கான ஜாக்கெட்டை எடுத்து அணிந்து கொண்டேன்.

ரயில் நிலையத்தின் உட்புறம் சென்று மெட்ரோ நிலையத்திற்கு எப்படி செல்ல வேண்டும் என்று ஆராய்ந்து கொண்டிருந்த போது “Hi, where are you from?” என்ற குரல் கேட்டு நிமிர்ந்தேன். தமிழன் போன்றே தெரிந்த ஒரு இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவன் நின்றிருந்தான். அவனுக்கு பின்னே அவனது நண்பர்கள் நான்கைந்து பேர் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களும் டூர் வந்திருப்பார்கள் போல. “India.you?” என்றேன். “srilanka. தமிழ் பேசுவீர்களா?” என்றான். ஈழத்தமிழ். “ம்.பேசுவேன்”. எங்கிருந்து வருகிறேன்? குரூப்பாக வருகிறேனா? தனியாக வந்திருக்கிறேனா? வேலை விஷயமாக வந்திருக்கிறேனா? யாரேனும் அழைக்க வருவார்களா? ரஷியன் மொழி தெரியுமா? தனியாக எப்படி பயணிக்கிறீர்கள்? பயமாக இல்லையா? என்று கேட்டுக்கொண்டிருந்தான். நானும் என் வீரதீர பராக்கிரமங்களை அடுக்கினேன். ஆச்சர்யமாக (அப்படித்தான் நினைக்கிறேன்) கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் மாணவர்கள். டூர் வந்திருக்கிறார்கள். இப்போது செயின்ட் பீட்டர்ஸ்பர்க் செல்கிறார்களாம். அவர்களிடம் விடைபெற்றுவிட்டு மெட்ரோ நிலையத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

மெட்ரோ நிலையமும் அந்த ரயில் நிலையத்தின் உட்புறம் தான் இருந்தது.  அங்கு சென்று 10பயணத்திற்கான டிக்கெட் கேட்டேன். அவர்கள் 10 மெட்ரோ காய்ன்கள் கொடுத்தார்கள். அவைதான் மெட்ரோ ரயில் டிக்கெட்டுகள். ஸ்டேஷனில் நுழையும் போது வெளியே இருக்கும் இயந்திரத்தின் உள்ளே போட்டு விட்டால் கதவு திறக்கும். நான் முன்பதிவு செய்திருந்த ஹாஸ்டெலுக்கு செல்ல ஒரு ஸ்டேஷன் மாறிச் செல்ல வேண்டும். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மெட்ரோவில் ஆங்கிலம் ரஷியன் இரண்டு மொழிகளிலும் எழுதப்பட்டிருந்தது. அதனால் மொபைல் மேப்பையும் ஸ்டேஷனில் எழுதப்பட்டிருப்பதையும் மாஸ்கோ போல் compare செய்து பார்த்துக் கொண்டு இருக்க தேவை இருக்கவில்லை. எனது sadovaya ஸ்டேஷன் வந்து சேர்ந்தேன். ஸ்டேஷன் விட்டு வெளியே வந்தேன்.

IMG_20170719_214616_HDR
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் வெண்ணிற இரவுகள். இரவு 9.30மணி

நான் நின்று கொண்டிருந்த இடம் Sennaya square. தஸ்தயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலில் வரும் வைக்கோல் சந்தை இந்த இடம் தான். அந்த காலத்தில் வைக்கோல்களையும் விறகுகளையும் விற்பனை செய்யும் இடமாக இருந்தது. இந்த இடத்தில் தான் ரஸ்கொல்நிக்கோவ் லிசாவெதாவின் உரையாடலை மறுநாள் வட்டிக்கார கிழவி வீட்டில் தனியாக இருப்பதை தற்செயலாக கேட்கிறான்.  இப்போது அது முச்சாலைகள் சந்திக்கும் பெரிய வளாகம். மக்கள் சாவகாசமாக  உட்கார்ந்து பேசிக் கொண்டும், புகைத்துக்கொண்டும் உட்கார்ந்திருந்தனர்.

அங்கிருந்து எனது ஹாஸ்டல் சிறிது தொலைவில் தான் இருந்தது. கூகிள் மேப்பில் ஹாஸ்டல் காண்பித்த இடத்திற்கு சென்று சேர்ந்துவிட்டேன். ஹாஸ்டல் அங்கிருந்த ஒரு கட்டிடத்தின் முதல் மாடியில் இருப்பதை கண்டுபிடித்துவிட்டேன். ஆனால் அதன் நுழை வாயிலை கண்டுபிடிக்க முடியவில்லை. அங்கும் இங்கும் சுற்றி சுற்றி வந்தேன். ம்ஹ்ம் . பொதுவாக ரஷ்ய கட்டிடங்கள் ஒரு நுழைவாயில், நுழைந்தவுடன் பூங்கா போன்ற காலியான இடம் பின் அரைவட்ட வடிவில் அல்லது நேரான வீடுகள் நிறைந்த கட்டிடம் என்றமைத்திருக்கின்றன. ஆனால் இந்த கட்டிடத்தின் நுழைவாயில் எங்கு என்று தெரியவில்லை. அருகே இருந்த கட்டிடத்தின் நுழைவாயிலுக்குள் சென்று ஒரு வேளை அங்கு வழி இருக்குமோ என்று தேடினேன். எந்த போர்டும் இல்லை.மூன்று இளம்பெண்கள் உள்ளே வந்தனர்.அவர்களிடம் “Do you know Bedandbike hostel?” என்று கேட்டேன்.அவர்கள் தெரியவில்லை என்று சொல்லி சென்றுவிட்டார்கள்.

தூரத்தில் அதைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு மத்திய வயதுடைய ஒருவர் என்னிடம் வந்து என்ன வேண்டும்? என்று ஆங்கிலத்தில் கேட்டார். சொன்னேன். அந்த கட்டிடத்தில் இருந்து என்னை வெளியே அழைத்து சென்று ஹாஸ்டல் இருந்த கட்டிடத்திற்கு கூட்டிச்சென்று கட்டிடத்தோடு சேர்ந்தவாரு ஒரு இரும்பு கதவின் முன்னே நின்று வெளியே இருந்த செக்யூரிட்டி பட்டனை அழுத்தினார். கதவு திறந்தது. மாடிக்கு செல்வதற்கான படிகள் தெரிந்தது. அந்த இடத்தில் தான் இதற்கு முன்னே அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருந்தேன். ஆனால் இதன் மேல் எனக்கு எந்த சந்தேகமும் வரவில்லை. வரவும் செய்யாது. வெளியே எந்த போர்டும் கூட இல்லை.அவருக்கு மிக்க நன்றி சொல்லிவிட்டு உள்ளே நுழைந்தேன்.

உள்ளே உடைந்த படிக்கட்டுகளை பார்த்தாலே பழைய கட்டிடம் என்று தெளிவாக தெரிந்தது. தயக்கமாய் இருந்தது. முதல் மாடிக்கு சென்று அங்கு மூடியிருந்த பொத்தானை அழுத்தி உள்ளே நுழைந்தால் வரவேற்பறையில் ஒரு அழகான இளம்பெண் உட்கார்ந்திருந்தாள். ஹாஸ்டல் உள்ளே மிக சுத்தமாக இருந்தது. அவளிடம் சென்று நான் முன்பதிவு செய்திருந்ததை காட்டினேன்.பார்த்துவிட்டு எனது பாஸ்போர்ட் விசாவை ஸ்கேன் செய்து வைத்து கொண்டு உங்களுக்கு விசா ரெஜிஸ்டர் செய்ய வேண்டுமா? என்று கேட்டாள். ஆம் என்றதும் அதற்கு 400 ரூபிள்ஸும், ஐந்து நாள் வாடகைக்கு 2700 ரூபிள்ஸ், முன்பணம் 200ரூபிள்ஸ் என்று மொத்தம் 3300ரூபிள்ஸ் வாங்கிக்கொண்டாள்.

DSCN1915
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் எனது அறை

இரண்டாவது மாடியில் அறை. இங்கும் நான்கு பேர் தங்கும் அறையில் தான் படுக்கை முன்பதிவு செய்திருந்தேன். நான் உள்ளே நுழைந்த போது ஒரு ரஷ்யன் ஜோடி இருந்தார்கள். பையை எல்லாம் பேக் செய்து வைத்து விட்டு கொஞ்சிக்கொண்டிருந்தார்கள். அனேகமாக காலி செய்யப்போகிறார்கள். எனக்கு ஒரு bunk பெட்டின் கீழ்ப்படுக்கை. மெயின் ரோட்டை நோக்கிய கண்ணாடி ஜன்னல் நான் படுத்தால் எனது முகத்திற்கு நேராக இருந்தது. மணி மாலை ஆறாகி இருந்தது.

சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு அருகே எங்கேனும் இந்தியன் உணவகம் இருக்கிறதா? என்று கூகிள் மேப்பில் தேடித் பார்த்தேன். ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் ஒன்று இருந்தது. எனது குளிர் ஜாக்கெட்டை எடுத்து அணிந்து கொண்டு வெளியே கிளம்பிச் சென்றேன். நேராக இந்திய உணவகம் நோக்கி நடக்க ஆரம்பித்தேன். போகும் வழியில் ஒரு செக்ஸ் ஷாப் இருந்தது. சகபாடிக்கு, அங்கிருந்து ஏதேனும் சாமான் வாங்கி வரணுமா? என்று குறுஞ்செய்தி அனுப்பினேன். இன்னும் பதில் வரவில்லை.இணையத்தில் தேடிக்கொண்டிருப்பான். அநேகமாக பெரிய லிஸ்டாக இருக்கும்.

இந்திய உணவகம் பார் வசதியுடன் இருந்தது. சீக்கியர்கள். பெரும்பாலும் வெளிநாடுகளில் ஹோட்டல் நடத்துபவர்கள் சீக்கியர்களாகத்தான் இருக்கிறார்கள். ஒரு பீர் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டேன். விலை அதிகம். தெரிந்ததுதான். ஆனால் மாஸ்கோவுடன் ஒப்பிடும்போது கம்மிதான். முடித்துவிட்டு அறைக்கு வர இரவு 10மணியானது. இன்னும் சூரியன் மறையவில்லை. மாஸ்கோவில் ஒன்பதரைக்கெல்லாம் இருட்டிவிடுகிறது. இங்கு சூரியன் மறைய பத்தரை பத்தேமுக்கால் ஆகிறது. காலை நான்கு மணிக்கே விடிந்து விடுகிறது. அறையில் இருந்த ஜோடி வெளியே போயிருந்தார்கள். தூங்கிவிட்டேன்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s